சர்க்கரை நோய் நாடி!
கம்ப்ளீட் மெடிக்கல் கைடு
மாறிவரும் வாழ்க்கை முறை, மருத்துவமனைக்குச் செலுத்த பணத்தைச் சேமிப்பது அத்தியாவசியம் என்கிறது. அந்தளவுக்கு தவிர்க்க முடியாமல் பெருகிக் கிடக்கின்றன
நோய்கள். நோய் எனும்போது, அதைப் பற்றிய அச்சத்தைவிட, விழிப்பு உணர்வே முதல் தேவை! இதுவே நோயை வெல்வதற்கான முதல்படி. வராமல் தடுப்பதற்கான வழியும்கூட. அப்படி ஒவ்வோர் இதழிலும் நோய்களைப் பற்றி அலசும் தொடர்... நோய் நாடி!
கடந்த இதழில் வெளியான சர்க்கரை நோய் பற்றிய அலசல், இந்த இதழிலும் தொடர்கிறது. கடந்த இதழில் பேசிய சென்னையைச் சேர்ந்த சர்க்கரை நோய் நிபுணர் கருணாநிதி மற்றும் சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் சர்க்கரை நோய் நிபுணர் தர்மராஜன் ஆகியோர் தந்த டிப்ஸ் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றன. கூடவே, சென்னை, ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் ’மருத்துவ உணவியல் துறை’ பேராசிரியை குந்தலா ரவி தரும் ஆலோசனைகளும்!
நினைவில் கொள்ளுங்கள்..!






சுகர்ஃப்ரீ... சரியா, தவறா?
சர்க்கரை நோயாளிகளுக்கான பிரத்யேக இனிப்பு, சுகர்ஃப்ரீ. பொதுவாக சர்க்கரையில் சிம்பிள்,காம்ப்ளெக்ஸ்
என இரண்டு வகையான கார்போஹைட்ரேட்கள் உள்ளன. இதில் குளுக்கோஸ், சுக்ரோஸ் போன்ற சிம்பிள் கார்போஹைட்ரேட்,
சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டியவை. காம்ப்ளெக்ஸ்
கார்போ ஹைட்ரேட் அன்றாட உணவில் இருப்பது; அது அவசியத் தேவையும்கூட.
சுகர்ஃப்ரீயில் காம்ப்ளெக்ஸ்
கார்போஹைட்ரேட் மட்டுமே உள்ளது என்பதால் அதை சர்க்கரை நோயாளிகள் மாற்று இனிப்பாக எடுத்துக் கொள்வதில் பெரிதாக பிரச்னை இல்லை.
சுகர்ஃப்ரீயிலேயே கலோரி ஸ்வீட்னஸ், நான்-கலோரி ஸ்வீட்னஸ் என இரண்டு வகைகள் இருக்கின்றன. சுக்ரோஸ் கலந்திருக்கும் நான்-கலோரி ஸ்வீட்னஸ்தான் பரிந்துரைக்க ஏற்றது. கலோரி ஸ்வீட்னஸ் வகை தவிர்க்க வேண்டியது.
இன்சுலின் என்பது என்ன?
இன்சுலின் என்பது, தைராய்டு போல உடலில் சுரக்கும் ஒரு ஹார்மோன். தைராய்டு சுரப்பில் பிரச்னை உள்ளவர்கள் தைராய்டு மாத்திரை எடுத்துக் கொள்வதுபோல, உடலில் இன்சுலின் சுரப்பு இல்லாதபோது அல்லது நின்றுபோகும்போது, இன்சுலின் ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இன்சுலின் என்பது ஒரு புரதம். அது இன்னும் மாத்திரை வடிவில் வராததால், ஊசியே ஒரே வழி.
சர்க்கரை பாதிப்பால் இன்சுலின் போடும் நிலைக்குத் தன் உடல் வரும்போது, பயத்தில் அதைத் தள்ளிப்போடுவார்கள் சிலர். இதனால் நோய் முற்றி, விளைவுகள் பெரிதாகும். எனவே, இன்சுலினைத்
தவிர்க்க நினைக்க வேண்டாம்.
கோதுமையே சிறந்தது...
இது உண்மையா?
சர்க்கரை நோயாளிகள் சிலர், சாதத்தில் கார்போஹைட்ரேட் இருக்கிறது என்று அதை ஒதுக்குவார்கள்.
அதில் இருப்பது உடலுக்குத் தேவையான காம்ப்ளெக்ஸ்
கார்போஹைட்ரேட். எனவே, மதியம் ஒருவேளையாவது சாதம் எடுத்துக்கொள்வது நல்லது. நார்மல் எடையில் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு ஒன்று முதல் ஒன்றரை கப் சாதம் சாப்பிடலாம். சிலர் இட்லி, தோசையைத் தவிர்த்து சப்பாத்தியை
நாடுவார்கள். உண்மையில் சப்பாத்தியிலும் இட்லி, தோசை, சாதத்தில் உள்ள சத்துக்களே உள்ளன. ஆனால், நமக்குப் பழகிப்போன இந்த உணவுகள் அளவுக்குச் சப்பாத்தியை சாப்பிட முடியாமல் அதன் அளவைச் சுருக்குவோம் என்பதாலேயே அது பரிந்துரைக்கப்படுகிறது. தோசை, இட்லி, சாதத்தை அளவாகச் சாப்பிட்டால், சப்பாத்தி பத்தியம் தேவையில்லை.
அரிசி உணவுகளோ, கோதுமை உணவுகளோ... எதுவாக இருந்தாலும், அந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது அந்த அளவுக்கு இணையாகவோ, அல்லது கூடுதலாகவோ காய்கறிகளையும் சேர்த்துக்கொள்வது நல்லது. அப்போதுதான்
ஹார்போஹைட்ரேட்டின் அளவானது குறைவாக இருக்கும். முழுமையாக அரிசி அல்லது கோதுமை உணவுகளை மட்டுமே திணித்தால், சர்க்கரையின் அளவு அதிகரிக்கவே
செய்யும்.
ஓட்ஸ் கஞ்சி... நோ!
தரமான ஓட்ஸில் நிறைய நார்ச்சத்தும், காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்டும் இருக்கும். அதனால், ஓட்ஸ் சர்க்கரை நோயாளிகளுக்கு
ஏற்றதே. ஆனால், அதைக் கஞ்சியாகச் செய்து சாப்பிடும்போது வேகமாக உடலில் பரவி, சீக்கிரம் செரித்து, சீக்கிரம் பசியைத் தூண்டும். எனவே, ஓட்ஸை தோசை, அடையாகச் செய்து சாப்பிடலாம்.
சர்க்கரை நோய் பாதிப்பில் இருப்பவர்கள் கவனத்துக்கு..!







