About Me

My photo
I am an IT professional, Nowadays our Lifestyle is changed a lot and of course we are chasing money. In India More than 7 crore people affected by Diabetes, High Cholesterol and infertility due to their Poor Food Habits &amp Lifestyle. This Blog is very useful for youngsters to lead good Lifestyle and be healthy and students to choose career courses.Work hard, but make time for your love, family and friends. Nobody remembers Powerpoint presentations on your Final Day.I believe Life is ours and we only Live our Life.... Thanks for visiting and welcome you to visit again. WHO LOVES GOD ARE SEARCHING GOD, WHO LOVES PEOPLE ARE LIVING AS GOD - SK ( Reach me @ +91 9791139942 to lead Healthy Family Life )

Saturday, 20 December 2014

unknown benefits of Keerai Leaf/veggies

மருத்துவ பொக்கிஷமாம் முருங்கைகீரை

கிராமங்களில் முருங்கை தின்னா முன்னூறு வராது என்று சொல்வார்கள். முருங்கை இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்கள் 300  நோய்களுக்கு மேல் வராமல் பாதுகாக்கப்படுவார்கள் என்கிறது பழமொழி. முருங்கை இலை, பூக்கள், காய் என அனைத்தும் மிகச்சிறந்த  உணவுப்பொருளாகப் பயன்படுகிறது.

முருங்கை இலையை உருவி எடுத்துவிட்டு அதன் காம்புகளை நறுக்கி மிளகு ரசம் செய்து சாப்பாட்டுடன் சாப்பிடலாம்.. முருங்கை கீரையை அடிக்கடி  பொரியல் செய்து சாப்பிட பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய் கபம், மந்தம் போன்றவை குணமாகும்.

முருங்கை இலையில் பாலாடையை விட 2 மடங்கு புரோட்டீன் இருக்கிறது. ஆரஞ்சைவிட 7 மடங்கு வைட்டமின் சி நிறைந்திருக்கிறது-.  வாழைப்பழத்தைவிட 3 மடங்கு பொட்டாசியம் இருக்கிறது. கேரட்டைவிட 4மடங்கு வைட்டமின் ஏ உள்ளது. பாலைவிட 4 மடங்கு கால்சியம் உள்ளது.  உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் முருங்கையிலை கொண்டுள்ளது என பட்டியலிடுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஏழைக்குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்படுகிறார்கள் என அனைவரிடமும் ஒரு தவறான கருத்து நிலவுகிறது. ஆனால் நடுத்தரக்  குடும்பத்தில் உள்ள குழந்தைகள்கூட ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்படுகிறார்கள் என்று கருத்து கணிப்பு சொல்கிறது. ஏனெனில் நாம் எடுத்துக்கொள்ளும் அன்றாட உணவில் போதுமான அளவு ஊட்டச்சத்து இருப்பதில்லை.

எனவே முருங்கை கீரையை அடிக்கடி சமையலில் சேர்த்து சாப்பிடவேண்டும். முருங்கை கீரை சாப்பிடாதவர்கள் முருங்கை இலையை நிழலில்  காயவைத்து பொடி செய்து தினமும் சாம்பார் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடலாம். தினமும் 8 முதல் 24 கிராம் முருங்கைப்பொடி உணவில்  சேர்த்துக்கொள்ளும் போது உடல் மிக ஆரோக்கியமாக இருக்கும்.

100 கிராம் முருங்கை இலையில் 92 கலோரி உள்ளது.
ஈரப்பதம்-75.9%
புரதம்-6.7%
கொழுப்பு-1.7%
தாதுக்கள்-2.3%
கார்போஹைட்ரேட்கள்-12.5%
கால்சியம்-400மி.கி
பாஸ்பரஸ்-70மி.கி

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைக் கீரை வாரம் இருமுறை சாப்பிட்டுவர உடல் சூடு தணியும். முருங்கை கீரையில் இரும் புச்சத்து, சுண்ணாம்பு சத்து கணிசமாக உள்ளது. முருங்கை கீரையை வேகவைத்து அதன்சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற் படும் மலச்சிக்கல் நீங்கும். முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும் பெருகும்.

முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கிவிட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் அனைத்தும் நீங்கும். முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும்.தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாள்ப் புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை கைகண்டமருந்து.

முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப்புண், கண் நோய் ஆகி யவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.வாரத்தில் ஒரு முறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால் ரத்தமும், சீறுநீரும் சுத்தம் அடையும். வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல்,மூட்டு வலியையும் போக்க வல்லது.

கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை ஊக்குவிக்கும். பிரசவத்தை துரிதப்படுத்தும். முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம் தாய்ப் பால் சுரப்பதை அதிகப்படுத்தும். ஆஸ்துமா, மார்பு சளி போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது.ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு.

சாதாரண வீடுகளில் காணப்படும் முருங்கை மரத்தை மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் முருங்கை பல வியாதிகளை  குணப்படுத்தும் சக்திகளை தன்னகத்தே கொண்டுள்ளது. உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு முறை முருங்கைகீரை சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.

பச்சை கீரைகளில் எண்ணிலடங்கா பயன்கள் இருக்கிறது நாம் தான் அதனை முறையாக பயன்படுத்த மறந்துவிட்டோம். கீரை உணவுகளை சும்மாவா  சேர்க்க சொல்லி சொன்னார்கள் நம் முன்னோர்கள். மருத்துவ பொக்கிஷம் நிறைந்த முருங்கைகீரையை இனிமேல் மிஸ் பண்ணாதீர்கள்.

--------------------------------------------
அல்சரை போக்கும் அகத்திக்கீரை

அகத்தி என்றாலே முதன்மை, முக்கியம் என்று பொருளாகும். நமது அகத்தில் உள்ள கழிவுகளை அகற்றுவதால் இது அகத்தி என்று பெயர் பெற்றுள்ளதாம். தமிழ்நாட்டில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பவர்கள் மறுநாள் துவாதசி அன்று இறைவனை வணங்கி உண்ணும் உணவில் அகத்திக்கீரை முக்கிய உணவாக இடம் பெறுகிறது. இது இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. பெரும்பாலும் அகத்திச்செடி நீர் தாங்கிய பூமிகளில் பயிர் செய்யப்படுகிறது. சத்துக்கள் அகத்திக் கீரையில் 73 சதவிகிதம் நீரும், 8.4 சதவிகிதம் புரதமும், 1.4 சதவிகிதம் கொழுப்பும், 2.1 சதவிகிதம் தாது உப்புகளும் இருக்கின்றன. இதில் 2.2 சதவிகிதம் நார்சத்தும் இருக்கிறது. மாவுச்சத்து 11.8 சதவிகிதமும் உள்ளது. சுண்ணாம்புச்சத்து இக்கீரையில் அதிக அளவில் உள்ளது. இது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.

இக்கீரை உயிர்ச்சத்துக்கள் நிறைந்த கீரையாகும். 100 கிராம் கீரையில், 9 ஆயிரம் உயிர் சத்தான வைட்டமின்கள் உள்ளது. தயாமின் சத்து 0.21 மில்லி கிராமும், ரைபோம் ஃப்ளோவின் சத்து 0.09 மில்லிகிராமும், நிக்கோடினிக் அமிலம் 1.2 மில்லிகிராமும், வைட்டமின் ‘சி‘ 169 மில்லி கிராம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பயன்கள்
அகத்திக்கீரையில் இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகிய அனைத்தும் மருந்தாக பயன்படுகின்றன. இக்கீரை காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன்படுத்தும் இயல்புடையது. குடல்புண், அரிப்பு, சொறிசிரங்கு, தொண்டைப்புண் மற்றும் தொண்டைவலி, தோல் நோய்கள் போன்றவற்றிற்கு இக்கீரையை சாப்பிடுவதன் மூலம் குணமாகும்.

மருத்துவ பயன்கள்
அகத்திக்கீரையைப் பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்கும்போது தொண்டைப் புண், தொண்டை வலி ஆகிய நோய்கள் நீங்கும். ரத்த பித்தம், ரத்த கொதிப்பு, ஆகியவை அகத்திக்கீரையை சாப்பிடுவதால் அகலும்.

பித்தம்: அகத்திக்கீரையை வாரம் ஒரு முறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பம், மலச்சிக்கல், காபி, டீ, ஆகியவற்றைக் குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும்.

அரிப்பு: அகத்தி மரப்பட்டை, வேர்ப்பட்டை வகைகளை கைப்பிடியளவு எடுத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு சுண்டக்காய்ச்சி அதனை வடிகட்டி 100 மி.லி. அளவு என 2 வேளை குடித்து வர காய்ச்சல், கை கால், மார்பு, உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிவு, அம்மைக் காய்ச்சல் குணமாகும்.

காய்ச்சல்: இக்கீரையைப் பிழிந்து அதன் சாறை 2 துளி மூக்கில் விட்டால் காய்ச்சல் நீங்கும். அகத்தி இலைச் சாற்றை நெற்றியில் தடவி நெற்றியை இலேசாக அனலில் காண்பிக்க கடுமையான தலைவலி, சளி, ஜலதோஷம் போன்றவை நீங்கும்.

பால் சுரக்க: இக்கீரையில் சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ அதிகளவு உள்ளது. பால் சுரக்காத தாய்மார்கள் தொடர்ந்து அகத்திக் கீரையைச் சாப்பிட நன்கு பால் சுரக்கும். இக்கீரை சமைக்கும்போது நன்றாக வேக வைத்து உண்ண வேண்டும். வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் சக்தி இக்கீரைக்கு உண்டு. இதன்மூலம் மலச்சிக்கல் நீங்கும். குழந்தைகளுக்கு நீர் கோர்த்துக் கொண்டால், இக்கீரையின் சாற்றை 5க்கு ஒரு பங்கு வீதம் தேன் கலந்து தலை உச்சியில் தடவினால் நீர்க்கோவை மறையும்.

காயம்: அகத்தி கீரையை வேக வைத்து அரைத்துக் காயங்களுக்கு கட்ட விரைவில் ஆறும். அகத்திப் பூச்சாறை கண்களில் பிழிய கண்நோய் குணமாகும்.

அல்சர்: அகத்தி கீரை வயிற்றுப் புண் (அல்சர்) என்னும் நோயைக் குணப்படுத்தும். இதற்கு அகத்திக்கீரையை நன்றாக கழுவி இதில் 4 பங்கு சின்ன வெங்காயத்தை சேர்த்து அகத்திக்கீரை சூப் தயாரித்து தினமும்  1 வேளை குடிக்கலாம்.

கால்வெடிப்பு: அகத்தி கீரையையும், மருதாணி இலையையும் சம அளவு எடுத்து நன்கு அரைத்து கால் வெடிப்புகளில் பற்றுப்போட்டால் வெடிப்புகள் மறையும்.

தேமல்: உடம்பில் காணப்படும் தேமலுக்கு அகத்தி கீரையின் இலையை தேங்கா எண்ணெய்யில் வதக்கி, அதை விழுதாக அரைத்து பூசி வந்தால் தேமல் முற்றிலுமாக மறையும். அகத்தி கீரை சாற்றை சேற்று புண்களில் தடவி வர சேற்று புண்கள் விரைவில் ஆறிவிடும்.

குறிப்பு: அகத்திக்கீரை மருந்து முறிவு கீரையாகும். பிற நோய்களுக்கு மருந்து சாப்பிடுபவர்கள் அகத்திக்கீரையை சாப்பிடக்கூடாது. மேலும் இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் ரத்தம் கெட்டுப்போகும் வாய்ப்புண்டு. இதனால் சொறி, சிரங்கும் தோன்றலாம். ரத்தம் குறைந்து ரத்த சோகை ஏற்பட்டு, வயிற்று வலியும் உண்டாகும். இக்கீரையை வாரத்துக்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால், நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
cure for ulcer
------------------------------------------
தைராய்டு பிரச்னை தீர்க்கும் கீரைகள்

தைராய்டு பிரச்னை பெரும்பா லும் பெண்களையே அதிகம் பாதிக்கிறது. அதுவும் இளம்பெண்களை இந்த தைராய்டு பாடாய்படுத்துகிறது. இதை விரட்ட சில விளக்கங்கள். கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அயோடின் ஏற்ற இறக்கமே இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் தைராய்டு நோய் ஏற்படுகிறது. தைராய்டு பெண்களின் தலையாய பிரச்னையாக மாறி வருகிறது. ஆனால், ஆண்களுக்கு மிகக்குறைந்த அளவிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது பெரும்பாலும் நோய்க்கிருமிகளால் தாக்கப்படுவதில்லை. அயோடின் குறைவே இதற்கு காரணம்.

தைராய்டு பாதிக்கப்பட்டால் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப்போகலாம். சில பெண்கள் குறைந்த வயதிலேயே பருவடையும் நிலையும் ஏற்படும். இந்த நோய் எல்லா வயது பெண்களையும் பாதிக்கிறது. ரத்த தைராக்சின் ஹார்மோன் குறைந்த அளவு இருப்பதால் நோய் பாதிப்பு உண்டாகிறது.  உடல் பருமன் அதிகரிப்பு, உடல் சோர்வடைதல், அதிக தூக்கம், முடி உதிர்தல், குளிர் தாங்க முடியாத தன்மை, இதயத்துடிப்பு குறைந்து கொண்டே போவது, மாதவிடாய் அதிகமாக உள்ள நிலை, ஞாபகசக்தி குறைதல், சருமம் வறட்சியாக காணப்படுதல் ஆகியவை இதன் அறிகுறியாகும். இந்த நோய் உள்ளவர்கள், பொதுவாக தைராக்சின் மாத்திரையை வாழ்நாள் முழுவதும் உட்கொள்ள வேண்டும். ஆண்டிற்கு ஒருமுறை ரத்த பரிசோதனையின் முலம் தைராக்சின் அளவை அறிய வேண்டும்.

பொதுவாக தைராய்டு சுரப்பி பெரிதாவதை ‘காய்டர்‘ என்று அழைக்கப்படுகிறது. பல காரணங்களால் இந்த கட்டி ஏற்படுகிறது. 5 முதல் 10 சதவீதம் பெண்களிடம் காணப்படுகிறது. தைராய்டு கட்டிகள் புற்றுநோய் (அ) புற்றுநோய் இல்லாத கட்டிகளாக உருவாகிறது. புற்றுநோய் இல்லாத கட்டிகள் மெதுவாக பெரிதாகும். இதனால் இதர உடல் உறுப்புகளையும் பாதிக்கும் அபாயம் ஏற்படலாம். இதை கண்டுபிடிக்க அல்ட்ரா ஸ்கேன் மற்றும் திசுப்பரிசோதனை ஆகியவற்றின் மூலம் தைராய்டு கட்டியின் தன்மையை எளிதில் கண்டறியலாம். பாரா தைராய்டு  நாளமில்லா சுரப்பி: நமது உடலில் மொத்தம் 4 பாரா தைராய்டு சுரப்பிகள் உள்ளன. இந்த சுரப்பிகள் தைராய்டு சுரப்பியின் பின்புற கழுத்தில் உள்ளது.

இந்த சுரப்பிகள் பாரா தைராய்டு ஹார்மோனை சுரக்கிறது. இந்த ஹார்மோன்கள் உடலின் ரத்தத்தில் கால்சியம் அளவினை கட்டுப்படுத்தும்.  சரியான அளவு கால்சியம் ரத்தத்தில் இருப்பது மிகவும் அவசியமானது. இதில் ஏற்படும் சிறு மாற்றங்களினால் உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடலில் பல்வேறு விதமான செயல்பாடுகளுக்கு கால்சியத்தின் அளவு மிக முக்கிய பங்களிக்கிறது, முக்கியமாக நரம்பு, தசை, இருதய செயல்பாடுகளுக்கு கால்சியம் மிகவும் அவசியமானது. உடலில் 99 சதவீதம் கால்சியம் எலும்பில்தான் உள்ளது. அறிகுறிகள்: தைராய்டு சுரப்பி குறைவாக இருக்கும் பெண்களுக்கு தொடக்கத்தில் மாத விலக்கில் மாற்றம் ஏற்படலாம். (அதிகமாக அல்லது குறைவாக இருக்கும்) இளம்பெண்களுக்கு கருமுட்டையில் நீர் கட்டிகள் (பாலி சிஸ்டிக் ஓவரியன் டிஸஸ்) இருக்கலாம்.

சில பெண்களுக்கு குழந்தை பிறப்புக்கு பிறகு தைராய்டு சுரப்பி குறைவாக இருக்கும். குழந்தை பிறப்புக்கு பிறகு உடல் குண்டாகி, முகம் பருமனாகிவிடும். கைகளில் வீக்கம், கழுத்து பகுதியில் வீக்கம் ஏற்படலாம். கை, கால்கள் உளைச்சல், மூட்டுவலி, ஞாபக மறதி, மனச்சோர்வு அதிகமாகும். சிலருக்கு குரல் மாறும். எச்சில் விழுங்கும்போது வலி ஏற்படும். சருமம் வறண்டு பொலிவு இழந்து காணப்படும். கரு முட்டைகள் சரியாக வளர்ச்சியடையாது. உடல் பருமன் காரணமாக குழந்தை பிறப்பு தடுக்கும்.

சாப்பிடக்கூடியவை தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்ய வேண்டுமென்றால் அயோடின், செலினியம் மிக முக்கியமாகும். செலினியம் அதிகம் உள்ள உணவு வகைகளான இறைச்சி, மீன், காளான், சோயாபீன்கள், சூரியகாந்தி விதைகள் ஆகியவையும் அவசியம். உணவில் பசலைக்கீரை, எள், பூண்டு ஆகியவை சேர்த்து சாப்பிடுவது நல்லது. உணவில் அயோடின் உள்ள உப்பை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் 4 முதல் 5 கிராம் உப்பு வரை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். கீரை வகைகள் சாப்பிடலாம். அவற்றை வேக வைக்கும்போது தண்ணீரை வடித்து விட்டு பயன்படுத்தலாம்.

முழு தானியங்கள் மற்றும் முளை கட்டிய பயறு வகைகள் உணவில் சேர்க்கலாம். பழச்சாறுகளும் உடலுக்கு ஏற்றது. ஊட்டச்சத்து உள்ள உணவுகள் அதிகம் சாப்பிட வேண்டும். சிகிச்சை: தைராய்டால் ஏற்படும் குரல் பிரச்னைக்கு ஆளானவர்கள் அக்ரகாரம், அதிமதுரம், கரிசலாங்கண்ணி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் இரண்டு கிராம் அளவுக்கு காலையில் சாப்பிட்டு வந்தால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். உடல் சோர்வின்போது, அகில் கட்டையை பொடி செய்து அதை நெருப்பில் தூவி வரும் புகையை முகரலாம்.

அசோக மரப்பட்டையை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து தினமும் மூன்று வேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு குணமாகும். தூதுவளைக் கீரைச்சாறு 30 மிலி அளவில் தினமும் காலையில் குடித்து வருவதன் மூலம் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு கரையும். தும்பை இலையை அரைத்து கழுத்துப் பகுதியில் பற்று போட்டால் கழலைகள் குணமாகும்.

------------------------------------------------
திக்குவாயை குணப்படுத்தும் வல்லாரை

வல்லாரை தரையில் படர்ந்து வளரும் இயல்புடையது. இதன் சிறுநீரக வடிவ இலைகள் கீரையாக பயன்படுகிறது. இதில் வைட்டமின் சி, ஓலிகோசேக்ரைட், லெப்ரெசி நோயை குணப்படுத்தும் மருந்தான அசியாடிகோசைட் உள்ளிட்டவை உள்ளன. வல்லாரை மூளைக்கான உணவு என அழைக்கப்படுகிறது. இது நினைவாற்றலை அதிகரிக்கும். பாக்டீரியாக்களை அழிக்கும், காயங்களை குணப்படுத்தும். பெங்கால் புலிகளுக்கு ஒரு பழக்கம் உள்ளது.

அவை காயமடைந்தால் வல்லாரை வளர்ந்திருக்கும் பகுதிக்குச் சென்று வல்லாரை இலைகளை கடித்து விட்டு நாக்கால் காயத்தின் மீது நக்குமாம். அப்போது அதன் காயம் விரைவில் குணமடைந்து விடுமாம். இதனால் வல்லாரைக்கு புலிப்புல் என்ற பெயரும் உண்டு. லெப்ரசி, யானைக்கால் நோய் போன்றவற்றை குணப்படுத்தும் ஆயின்மெண்ட்களிலும் வல்லாரை பயன்படுத்தப்படுகிறது.

காய்ச்சலுக்கு:

வல்லாரை கீரை ஒருபிடி, துளசி இலைகள் ஒரு பிடி எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாக வற்றும் வரை காய்ச்ச வேண்டும். இதை அரை கப் வீதம் தினமும் 3 வேளை குடித்தால் காய்ச்சல் குணமாகும். இதனுடன் நல்லமிளகும் சேர்க்கலாம்.

சிறுநீர் பெருக்கி:

சிறுநீர் பையில் புண்கள், சிறுநீர் செல்லும் போது வலி உள்ளவர்கள் வல்லாரையை சாறு பிழிந்து 3 ஸ்பூன் சாறுடன், தேன் கலந்து தினமும் 3 நேரம் அருந்தலாம். இது சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படுகிறது. ஒரு வாரம் இது போல் அருந்தினால் நிவாரணம் கிடைக்கும்.

நினைவாற்றல் பெருக:

பாலில் வல்லாரையை நசுக்கி போட்டு காய்த்து தினமும் இரவு தூங்கும் முன்பு பருக வேண்டும். இது போன்று 3 வாரங்கள் செய்ய வேண்டும். அல்லது 5 கிராம் வல்லாரை பொடியை பாலில் கலந்து தினமும் இரண்டு நேரம் குடித்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

பல், ஈறு பாதுகாப்புக்கு:

வல்லாரை இலைகள், மா இலைகள், கொய்யா இலைகள், கிராம்பு, நல்லமிளகு, உப்பு சேர்த்து செய்யப்படும் பற்பொடி பல், ஈறுகளை பாதுகாக்கும்.

திக்குவாய் குணமாக:

தினமும் 5 வல்லாரை இலைகளை மென்று தின்று தண்ணீர் குடித்து வந்தால் குழந்தைகளுக்கு பேச்சு திருந்தும். திக்குவாய் குணமாகும்

------------------------------------------
மூலிகையாக பயன்படும் கீரை (காசினிக் கீரை)

காசினிக் கீரை என அழைக்கப்படும் காணாம்கோழிக் கீரை பற்றி தெரிந்துகொள்வோம். இந்த கீரை புளிச்சக் கீரை வகையைச் சார்ந்தது. மூலிகை மருத்துவத்தில் இதற்கு அதிக முக்கியத்துவம் உண்டு. நல்ல சுவையுடைய கீரையாகும்.

உடல் சூடு குறைய

தற்போது கோடைக் காலம் என்பதால் வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும். இதனால் உடலானது அதிக சூடடைகிறது. மேலும் பல வெப்ப நோய்கள் தாக்க ஏதுவாகிறது. இன்னும் சிலருக்கு குளிர்காலத்தில் கூட உடம்பு அதிக சூடாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் தண்ணீர் அருந்தினாலும் சூடு குறையாமல் இருக்கும். இவ்வாறு எப்போதும் உஷ்ணமாக இருப்பவர்களுக்கு காசினிக் கீரை சஞ்சீவியாக உதவுகிறது.

காசினிக் கீரையோடு தூதுவளைக் கீரையையும் சேர்த்து கூடவே பாசிப்பருப்பு கலந்து வேகவைத்து நன்றாக கடைந்து அல்லது மிக்ஸியில் இட்டு அரைத்து சாதத்துடன் சேர்த்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடல் காங்கை என்னும் உடல் சூடு தணிய இதுவே நல்ல கீரை என்கின்றனர் சித்தர்கள்.

உடல் எடை குறைய

சிலரின் உடலானது நன்கு குண்டாக காணப்படும். இவர்களால் அதிக தூரம் நடக்க முடியாது. வேகமாக செயல்பட முடியாமல் தவிப்பார்கள். ஓல்லியாக இருப்பவர்களைப் பார்த்து ஏக்க மூச்சு விடுவார்கள். சில சமயங்களில் உடல் எடையைக் குறைக்கிறேன் என்று உணவு சாப்பிடாமல் பட்டினியாக இருப்பார்கள். சிலர் பல உடற்பயிற்சி செய்தும் உடல் எடை குறையவில்லை என்பார்கள். இதற்கு பல காரணங்கள் உள்ளன.

உடம்பில் அதிகம் நீர் சேர்வதால் உடம்பு பெருத்து காணப்படும். இவர்களுக்கு எந்த வகையான மருந்து கொடுத்தாலும் உடல் எடை குறையாது. இவர்கள் காசினிக் கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற நீரை நீக்குவதுடன் உடலை சீராக வைக்க உதவும். மேலும் இந்தக் கீரையை நீரில் கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் உடல் எடை குறையும்.

இரத்தத்தை சுத்தப்படுத்த

இன்றைய நவீன முறை உணவு வகைகளால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் இரத்தத்தின் வீரியம் குறைந்து போகிறது. மேலும் தூய்மையான பிராணவாயுவும் கிடைப்பதில்லை. மன அழுத்தம் போன்ற காரணங்களால் உடலில் பித்தம் அதிகரித்து பித்த நீர் இரத்தத்தில் கலந்து இரத்தம் மாசுபடுகிறது. இதனால் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைகிறது. இதற்கு காசினிக் கீரையை பாசிப்பருப்புடன் வேகவைத்து கடைந்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடைந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தாதுவை விருத்தி செய்ய

தாதுவை விருத்தி செய்யும் குணம் காசினிக் கீரைக்கு உண்டு. காசினிக் கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இதன் வேர் காய்ச்சலைப் போக்கி உடலுக்கு வலு கொடுக்கும். அதிக உயிர்ச்சத்து கொண்ட கீரை இது. இத்தகைய பயனுள்ள கீரையை அடிக்கடி பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு

சர்க்கரை நோயாளிகளுக்கு காசினிக் கீரை ஒரு அற்புத மருந்தாகும். உணவு, தூக்கம், உடற்பயிற்சி இவை சரியாக இல்லாததால் சர்க்கரை என்னும் நீரழிவு நோய் உருவாகிறது. மேலும் பரம்பரை மற்றும் சில காரணங்களாலும் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. காசினிக் கீரை, சர்க்கரை நோயினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து விடுபடவைக்கும். காசினிக் கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு, தினமும் காலை வேளையில் ஒரு டம்ளர் வெந்நீரில் 1 ஸ்பூன் அளவு கலந்து வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

பெண்களுக்கு

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதல், அதிக உதிரப்போக்கு இவற்றிற்கு காசினிக் கீரை நல்ல மருந்து. காசினிக் கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும். அல்லது காசினிக் கீரையை கடைந்து மதிய உணவில் வாரம் இருமுறை சேர்த்து சாப்பிட்டு வந்தால் அதிக உதிரப்போக்கு குறையும்.

ஆறாத புண் குணமாக

சிலருக்கு புண்கள் ஏற்பட்டால் எளிதில் ஆறாது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புண்கள் ஏற்பட்டால் சில சமயங்களில் அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு சென்றுவிடும். இதற்கு காசினிக் கீரையை நன்கு அரைத்து புண்ணின் மேல் கனமாக பற்று போட்டு கட்டி வந்தால் வெகு விரைவில் புண்கள் ஆறிவிடும்.
------------------------------------------------------
சர்க்கரை நோயின் பாதிப்பை நீக்கும் ஆரைக்கீரை

செங்குத்தாக வளர்ந்த தண்டில் நான்கு கால்வட்ட இலைகளைக் கொண்ட நீர்த்தாவரம் . இலையே மருத்துவப்பயனுடையது,கீரைக்கட்டாக  விற்கப்படுகிறது. வெப்பம் நீக்குதல்,தாகம் தணித்தல் ஆகிய பண்புகளைக் கொண்டது. விட்டமின் ஏ சத்து அதிகம் கொண்டது,இதை தொடர்ந்து  உட்கொண்டு வந்தால் சுவையின்மை பிரச்சினையும்,செரியாமை பிரச்சினையும் அகலும்.

தாய்ப்பால் சுரப்பை நிறுத்த விரும்புவோர் இந்தக்கீரையை அடிக்கடி சமைத்துண்ண பலன் கிடைக்கும். இது நன்கு சுவையைத் தரும்.  மன உளைச்சல்,  மூளைச் சூடு போன்றவற்றை நீக்கும்.  முக்குற்றங்களில் ஒன்றான பித்தத்தை தணிக்கும, நீரிழிவின் பாதிப்பைக் குறைக்கும்.  அடிக்கடி நீர் பிரிதலைத்  தடுக்கும்.  பெண்களுக்கு வெள்ளைப் படுதலைக் குறைக்கும்.

கீரையை சமைத்துண்னவோ,சூரணம் செய்து வைத்துக் கொண்டு காலை மாலை சாப்பிட்டு வரவோ செய்தால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.  ஆரைக் கீரையின் பயன்களை அன்றே தமிழ் மூதாட்டி ஔவையார் பாடியுள்ளார்.  நீராரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி தினமும் பாலில் அரைத்  தேக்கரண்டி அளவு எடுத்து மூன்று வேளையும்  அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மன அழுத்தப் பிரச்சினைகள் இருப்போர் தொடர்ந்து இந்த கீரையை சாப்பிட்டு வர பிரச்சினை சரியாகும். மன அழுத்தம்,வலிப்பு நோய்களுக்கு  ஆயுர்வேத மருத்துவத்தில் ஆராக்கீரை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இதன் சூரணத்தை 30கிராம் எடுத்து அரைலிட்டர் நீரில் இட்டு காய்ச்சி அது  பாதியாக சுண்டியவுடன் அதனுடன் பால்,பனங்கற்கண்டு கலந்து காலை மாலை சாப்பிட்டு வர நீரிழிவு,அதிக தாகம்,சிறுநீரில் இரத்தம் போதல் ஆகிய  பிரச்சினைகள் தீரும்.

குழந்தைபேற்றினை தள்ளிப்போட நினைப்பவர்கள் இந்தக்கீரையை அடிக்கடி சாப்பிடலாம்,கருவுறுதலை தடுக்கும் ஆற்றல் இக்கீரைக்கு இருப்பதால்  குழந்தைப்பேற்றுக்காக காத்திருப்போர்,கருவுற்றப்பெண்கள் இக்கீரையை தவிர்ப்பது நலம்.


ஆரைக்கீரை சூப்

ஆரைக் கீரை        - 1 கைப்பிடி
கறிவேப்பிலை    - சிறிதளவு
கொத்தமல்லி இலை    - சிறிதளவு
சின்ன வெங்காயம்     - 5
பூண்டுப்பல்        - 3
மிளகு        - 5
சீரகம்        - 1 ஸ்பூன்
சோம்பு        - 1 ஸ்பூன்
இஞ்சி        - 1 சிறு துண்டு
உப்பு        - தேவையான அளவு

இவற்றைச் சேர்த்து நன்கு நீரில் கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வரலாம்.

சர்க்கரை நோயின் பாதிப்புக்கு ஆளானவர்கள், வாரம் இருமுறை ஆரைக் கீரை சூப் அருந்தி வந்தால் உடல் சோர்வு, மயக்கம், கை, கால் நடுக்கம்  நீங்கும்.  அடிக்கடி சிறுநீர் வெளியேறுவது குறையும்.  மலச்சிக்கல் தீரும்.  அசீரணக் கோளாறுகள் நீங்கும்.

சரும நோய்கள் ஏதும் அணுகாது.  பித்தத்தைத் தணிப்பதால் கண்பார்வை நரம்புகள் வலுவடையும். பெண்களுக்கு உண்டாகும் சூலக நோய்களைத்  தடுக்கும். வயிற்றுப் பூச்சிகளை நீக்குவதுடன், வயிற்றுப் புண்களையும் ஆற்றும்.
--------------------------------------
வாய் புண்ணை குணமாக்கும் மணத்தக்காளி

மேடைப் பேச்சாளர்கள், பாடகர்களுக்கு தொண்டைக் கட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். இவர்கள் மணத்தக்காளி கீரையை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. இக்கீரை உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. அவற்றைக் குணப்படுத்தியும் விடும். சிறுநீர்க் கோளாறுகளை நீக்கும். இத்துடன் சிறுநீர் நன்கு பிரியவும் வழி அமைத்துக் கொடுக்கும். சிறிது கசப்புச் சுவையுடையது இக்கீரை. சமைத்து சாப்பிடும் போது கசப்பு குறைவாய் இருக்கும்.

இக்கீரையைக் கசாயமாய் அருந்தலாம். பருப்பு சேர்த்து மசியல், பொரியல் செய்து சாப்பிடலாம். கீரையையும், இளந்தண்டுகளையும் சாறாக மாற்றி ஒரு வேளைக்கு ஆறு மில்லி வீதம் அருந்தலாம். மேற்கண்ட மூன்று முறைகளுள் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினாலும் நீர்க்கோர்வை நோய் விரைந்து குணமாகும். கீரையைப் போலவே பழமும் சக்திவாய்ந்த மருந்தாகும். காசநோயாளிகள் இப்பழங்களைத் தினமும் சாப்பிடுவது நல்லது. மணத்தக்காளியின் காயும், பழமும் மிளகு அளவேதான் இருக்கும். நன்கு பசி எடுத்துச் சாப்பிடவும் இப்பழம் உதவுகிறது.

இதுகுறித்து தர்மபுரி அரசு சித்த மருத்துவ பிரிவு செல்வமூர்த்தி கூறியதாவது:

மணத்தக்காளி (Solanum nigrum)

சிவப்பு, கறுப்பு என இரண்டு வகைப்படும். இலை, காய் இரண்டும் பெரிதும் பயன்படுகிறது. மணத்தக்காளியை மணித்தக்காளி, மிளகுத்தக்காளி, விடைக்கந்தம், உலக மகா என வழக்கத்தில் அழைக்கப்படுகிறது. கபநோயால் உண்டாகும் நாப்புண், நாவேக்காடு, உட்சூடு, நா எரிச்சல், இருமல் சளி மணத்தக்காளி பயன்படுத்தினால் தீரும். ஆண்கள் தாதுபலம் பெற இப்பழத்தை சாப்பிட வேண்டும். தேமல், வீக்கங்கள், பருக்கள், கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத் தடவலாம். உடலில் வலி உள்ள இடங்களிலும் வலிநீக்கும் மருந்து போல இக்கீரைச் சாற்றைத் தேய்த்து உடல் வலி நீங்கப் பெறலாம். நாள்பட்ட நோய் வியாதிகள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், தேங்காய் தண்ணீர், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தினமும் அருந்தி வரவேண்டும். மணத்தக்காளி காயை வற்றல் போடலாம். வற்றலிலும் மருத்துவக் குணங்கள் சிதையாமல் இருக்கிறது.

வாய் புண் (Auptus ulcer)

உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும். இந்த பிரச்னைக்கு நல்ல மருந்து மணத்தக்காளி கீரை. இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய் புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும். 100 கிராம் கீரையில் ஈரப்பதம் 82.1%, புரதம் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புகள் 2.1%, மாவுச்சத்து 8.9% உள்ளன. நோயைக் குணமாக்கி உடலின் கட்டுமானப் பகுதியைப் பார்த்துக் கொள்ள 410 மில்லி கிராம் கால்சியமும், மூளை வளர்ச்சி, மனத்திற்கு சுறுசுறுப்பு ஆகிய அளிக்க 70 மில்லி கிராம் எரியம்

(Phosphorus), நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும். 11 மில்லி கிராம் வைட்டமின் சியும் இக்கீரையில் உள்ளன. மூலநோய்க்கும், குடல் பிரச்னைக்கும் இந்த கீரை நல்ல மருந்து. இவ்வாறு சித்த மருத்துவர் கூறினார

------------------------------------------------

No comments:

Post a Comment