போகர் தனது `ஜெனன சாகரம்' என்ற நூலில் எழுதியிருக்கும் பாடல் ஒன்றில், `நாமென்ற சிரியாநங்கை வேரைத்தின்றால் நல்லதொரு விஷமெல்லாம் நாடாதோடும், வாமென்ற சடைச்சி வேரரைத்துத்தின்ன வல்லதொரு விஷங்களெல்லாம் வாங்கும்வாங்கும்' என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, சிறியா நங்கை வேரைத் தின்றாலும், சடைச்சி வேரை அரைத்துத் தின்றாலும் சீந்தில் தண்டின் பாலை உண்டாலும் விஷங்கள் நீங்கும் என்பதே அதன் பொருளாகும்.
நோய்களில் இருந்து நமக்கு விடுதலை பெற்றுத்தருவது மட்டுமல்லாமல் மனிதனின் உயிரைப் பறிக்கும் பாம்பிடமிருந்தும் நம்மைக் காப்பாற்றும் வல்லமை படைத்தது சிறியா நங்கை. அதுமட்டுமல்ல... பாம்புக்கும் கீரிக்கும் சண்டை நடக்கும்போது பாம்பிடம் கடிபடும் கீரிப்பிள்ளை தன் உடம்பில் ஏற்பட்ட விஷத்துடன் கூடிய ரத்தக்காயத்தைப்போக்க சிறியா நங்கைச் செடியின்மீது புரண்டு எழுந்து நிவாரணம் பெறுமாம்.
சிறியா நங்கையைப்போல பெரியா நங்கை, முள்ளா நங்கை, மலை நங்கை, வைங்க நங்கை, கரு நங்கை, வெண்ணங்கை, வசியா நங்கை, செந்நங்கை எனப் பல நங்கைகள் இருந்தாலும் சிறியா நங்கையும் பெரியா நங்கையும் மட்டுமே மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், சிறியா நங்கையை நிலவேம்பு, மிளகாய் நங்கை, குருந்து, கொடிக்குருந்து என்ற வேறு பெயர்களிலும் அழைக்கிறார்கள். வேப்பிலை, மிளகாய்ச்செடி போன்று காணப்படும் இது கடுமையான கசப்புத்தன்மை கொண்டது. இலை முதல் வேர்ப்பகுதி வரை அனைத்துமே மருத்துவக்குணம் கொண்டது. அந்தக்காலத்தில் வேட்டைக்குச் செல்பவர்கள் நிலவேம்புச் (சிறியா நங்கை) செடியின் வடக்கத்திய வேரை காப்பு கட்டி கடை வாயில் வைத்துக் கடித்தபடி செல்வார்கள். அப்போது எந்த விஷப்பூச்சி கடித்தாலும் அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாதாம். மேலும் பொதுவாக விஷப்பூச்சிகள் எதுவும் கடித்துவிட்டால் ஒரு கைப்பிடி நிலவேம்பு இலைகளுடன் சிறிது மிளகு சேர்த்துச் சாப்பிட்டால் விஷம் இறங்கிவிடும்.
பொதுவாக நிலவேம்பின் முழுச் செடியையும் நிழலில் காய வைத்து பிறகு வெயிலில் காய வைத்து இடித்துச் சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் கால் ஸ்பூன் அளவு காலை மற்றும் மாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு தண்ணீர் குடிக்க வேண்டும். இதை 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பாம்போ, தேளோ எந்தவித விஷப்பூச்சிகளும் நம்மைக் கடித்தால் அவை இறந்துவிடும். அந்த அளவுக்கு விஷ எதிர்ப்புத்தன்மை நம் உடம்பில் ஊறிப்போயிருக்கும். பொதுவாகவே,நிலவேம்புச் செடியின் இலையைப் பறிப்பவர்கள் எவ்வளவுதான் கையைக் கழுவினாலும் அதன் கசப்புத்தன்மை விலகாது. இலையைப் பறித்தவர்கள் சாப்பாட்டைத் தொட்டால் அது வாயில் வைக்க முடியாத அளவுக்குக் கசப்புத்தன்மையுடன் இருக்கும்.
சர்க்கரை நோயாளிகள் மற்றும் ஒவ்வாமையால் (அலர்ஜி) பாதிக்கப்பட்டவர்கள் தினமும் காலைவேளையில் உணவு உண்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் நிலவேம்பு இலையைச் சாப்பிட்டு வந்தால் கைமேல் பலன் கிடைக்கும். இதன் இலைப்பொடியுடன் நெல்லி முள்ளி (காய்ந்த நெல்லிக்காய்) பொடி, வெந்தயப் பொடி, சிறு குறிஞ்சான் இலைப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி காலை, மாலை என அருந்திவந்தால் சர்க்கரை நோயின் தீவிரம் வெகுவாகக் குறையும்.
கல்லீரல் நோய் மற்றும் மஞ்சள்காமாலை, சைனஸ், மலேரியா போன்றவற்றால் அவதிப்படுபவர்களுக்கும் சிறியாநங்கை நல்ல மருந்தாகும். காய்ச்சல், சைனஸ், சளித்தொல்லைக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.இதன் இலைகளை எலுமிச்சைச்சாறு விட்டு அரைத்து வீக்கங்களின் மேல் பற்றுப் போட்டு வந்தால் வீக்கம் குறையும். ரத்தம் சுத்திகரிக்க மருந்தாகப் பயன்படுகிறது.
No comments:
Post a Comment