உங்கள் ராசிக்கு உகந்த ஆலயங்கள்!
ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்
வடகிழக்கில் இருந்து வீசும் குளிர்காற்றையும், விண்ணில் நகரும் மேகங்களின் போக்கையும் வைத்து பருவமழை எப்போது வரும் என்று முன்னரே கணித்துப் பயிர் செய்து பலன் பெற்ற நம் முன்னோர், வாழ்க்கை செழிக்கத் தேவையான முன்னறிவிப்பாக ஜோதிடக் கலையை பயன்படுத்தினார்கள்.
மனிதனின் யூகங்கள் நம்பகத்தன்மை இல்லாதவை. சிற்சில விஷயங்களில் பலிக்கும் நமது எதிர்பார்ப்புகள், பல தருணங்களில் பொய்த்துப்போகும். ஆனால், ஜோதிட சாஸ்திரத் தின் அறிவிப்பு பொய்க்காது. வருங்காலத்தை உள்ளங்கை நெல்லிக்கனியென தெள்ளத்தெளி வாக எடுத்துரைத்துவிடும். ஒருவன் பிறந்த தருணத்தில் ஆட்சி செலுத்தும் கிரகங்கள்- ராசிகள்- நட்சத்திரங்களின் அமைவுகளை அடிப்படையாகக் கொண்டு, மகான்களால் எழுதிவைக்கப்பட்ட ஜோதிட சாஸ்திரம், அவனுக்கான வருங்கால பலன்களை வரையறுத்துவிடும்.
ஆனால், இன்றைய உலகம் இதன் அருமை பெருமையை உணராமலும், இதுபோன்ற ஞான சாஸ்திரங்கள் தரும் அறிவுரைக்குச் செவிகொடுக் காமலும் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றது. மனிதன் ஒவ்வொருவரும் தன்னை சுயம்புவாகவே பாவித்துக் கொள்கிறான்.
நம் உடம்பை எடுத்துக் கொள்ளுங்கள். ஐம்புலன் களாலும், கை-கால்களாலும் உடம்பின் இயக்கத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்றாலும், உடலுக்குள் ஓயாமால் உழைத்துக் கொண்டிருக்கும் இதயம், இரைப்பை, ஈரல், சிறுநீரகம் முதலானவற்றின் இயக்கத்தை யார் நிர்வகிக்கிறார்கள்? பரம்பொருள்தான் என்னும் அந்த சூட்சும உண்மையை உணர்ந்துகொண்டால் எல்லாமும் நலமாகும்.
இயற்கை வேறு, இறைவன் வேறல்ல! இயற்கையின் இயக்கத்தை - ஆற்றலை நம்மிடம் திணிப்பது கிரகங்களும், ராசி நட்சத்திரங்களும்தான். நட்சத்திரக் கதிர்வீச்சுகள் அதற்குரிய தன்மையோடு பூமியை அடைய, அவற்றுடன் கிரகங்களின் கதிர்வீச்சும் இணைந்து ரசவாத மாற்றத்தை நிகழ்த்துகின்றன. அதற்கு ஆட்படும் மனிதனானவன் தனது பூர்வஜன்ம வினைகளுக்கு ஏற்ப பலனையோ, பாதிப்பையோ ஏற்கிறான். அங்ஙனம் பாதிப்புகள் உண்டாகும்போது மனம் சோர்வுறாமல் வலிமை பெறவும், தாழ்வைக் கட்டுப்படுத்தவும், வாழ்வை மேம்படுத்தவும் இறைவழிபாடு உதவும். ராசி நாயகனையும் நட்சத்திர நாயகனையும் சமநிலைப் படுத்தக்கூடிய வல்லமை ஆலயங்களுக்கு மட்டுமே உண்டு. ஞானிகளின் ஜீவ சமாதிகளுக்கும், அவர்கள் அருள்பாலிக்கும் கோயில்களுக்கும் சென்று வணங்கி வழிபட்டு வரலாம்.
அந்த வகையில், குறிப்பிட்ட ராசியில் பிறந்தவர்கள் என்னென்ன குணநலன்களோடு இருப்பார் கள், அவர்கள் வழிபட்டு வரம் பெறவேண்டிய தலங்கள் என்னென்ன என்பது குறித்த விரிவான விளக்கங்களைத் தரும் கையேடுதான் இந்த இணைப்பிதழ். அத்துடன் நட்சத்திர ரீதியான குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
See Also: தினம் தினம் வழிபடுவோம்!ராசிகளின் ஆதிக்கத்தை அறிவது போன்றே, அவற்றின் கூட்டமைப்பான நட்சத்திரங் களையும், அவற்றின் நான்கு பாதங்களையும் - ஆதிக்கத்தையும் அறிவதன் மூலம், இன்னும் துல்லியமாகக் காலக்கணிதத்தைத் தெரிந்து கொள்ளலாம். அவ்வகையிலேயே இந்த இதழில் ராசிக் கோயில்களை தந்துள்ளதுடன், ஒவ்வொரு நட்சத்திரத்தின் படியும் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய கோயில்கள் குறித்த தகவல்களையும் அளித்துள் ளோம். வாசகர்கள், வாழ்வில் ஒருமுறையேனும் குறிப்பிட்ட அந்தத் திருத்தலங்களுக்குச் சென்று, முறைப்படி வழிபட்டு வரம்பெற்று வாருங்கள். உங்கள் இல்லம் செழிக்கவும், உள்ளம் மகிழவும் இறையருள் துணை நிற்கட்டும்!
மேஷம்சூரியன் ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒரு மாதம் அமர்ந்து பலன்களைத் தருகிறார். பன்னிரண்டு ராசிகளையும் 360 டிகிரி என்று வைத்துக் கொண்டால், முதல் 30 டிகிரியில் மேஷ ராசி இடம் பெறும். இந்த ராசியில் இருந்துதான் சூரியனின் ஒளிப் பயணம் தொடங்குகிறது.
மேஷ ராசியில் அசுவினி, பரணி மற்றும் கிருத்திகை நட்சத்திரத்தின் முதல் பாதம் ஆகியவை இடம் பெறுகின்றன. இந்த நட்சத்திர மண்டலத்தை தொலைநோக்கி வழியாக உற்றுப் பார்க்கும்போது, மேஷம் என்னும் ஆட்டின் வடிவம் தெரிவதைப் பார்க்கலாம். ராசி மண்டலத்தை மனித உடலாக உருவகப்படுத்தினால், மேஷத்தை கபாலம் என்று சொல்லலாம்.
மேஷத்தில் பிறந்த நீங்கள், சிங்கம்போல இருப்பீர்கள். உங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படும், குழந்தைகளைப் பற்றிச் சொல்லும் 5-ம் இடம், சிம்ம ராசிக்கு உரியது. அதற்கு அதிபதி சூரியன். எனவே, உங்களைவிட உங்கள் பிள்ளைகள் புத்திக்கூர்மையும், செல்வ வளமும் பெற்றிருப்பார்கள்.
செவ்வாய் அதிபதியாக ஆட்சி செலுத்தும் இந்த மேஷ ராசியில்தான் சூரியன் உச்சம் பெறுகிறார். இந்த ராசியில் பிறந்தவர்களிடம் செவ்வாயின் தாக்கம் மிகுந்திருக்கும். நான்கு சகோதரர்களுக்கு இடையில் நீங்கள் பிறந்திருந்தாலும், உங்களின் அறிவு பலத்தால் நீங்களே முதல்வராக இருப்பீர்கள். ஆனாலும், உடன்பிறந்தவர்களிடம் அதிக அன்புடன் இருப்பீர்கள். சில நேரங்களில், உடன் பிறந்தவர்கள் உங்களைப் புரிந்துகொள்ளவில்லையே எனும் ஆதங்கமும் எழும்.
அதேபோன்று, பூமிகாரகனாகிய செவ்வாயின் ராசியில் பிறந்தவர்கள் என்பதால், சொந்த நிலம் வாங்கும் யோகம் உண்டு. உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டுக்கும் சுக்கிரன் அதிபதியாகிறார். ஆகவே, கலைகளில் நாட்டம் இருக்கும். பழைமை விரும்பிகளாகவும் திகழ்வீர்கள். அதிலும் முன்னோர்கள் நினைவுகளையும், அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் பொக்கிஷம் போன்று பாதுகாத்து வருவீர்கள். மண் சார்ந்த விஷயங்கள் உங்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும்.
சுற்றியிருப்பவர்களிலேயே உங்களுக்கு எதிராகச் செயல்படுபவர்களும் உண்டு என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். மனிதர்களை இனம் கண்டறிவதிலும் கவனம் செலுத்துவது அவசியம்.
இந்த ராசிக்காரர்களிடம் கிரகிக்கும் தன்மையும், கற்றுக்கொள்ளும் வேகமும் அதிகம் இருக்கும். வேலையிலும் வெகு சீக்கிரம் சாதனை படைப்பார்கள். பலநூறு பேருக்கு மத்தியில் வேலை செய்தாலும், சட்டென்று அனைவரது கவனத்தையும் தன்பக்கம் ஈர்க்கும் ஆற்றல் இந்த ராசிக்காரர்களுக்கு உண்டு. உங்களில் பலரும் படித்த படிப்புக்கு ஏற்ற வேலையில் இருக்க மாட்டார்கள். படித்த துறை வேறாகவும், பணி புரியும் துறை வேறாகவும் இருக்கும். மற்றவர்களிடம் உதவி கேட்பது, எடுத்துக்கொள்ளும் பணியில் முடிவு வரையிலும் ஆர்வம் காட்டாமல் கோட்டைவிடுவது, எதிரிகளின் பலத்தை கணிக்காமல் செயல்படுவது ஆகியன உங்களுக்கான மைனஸ் விஷயங்கள். இவற்றைத் தவிர்க்கப் பாருங்கள்.
சில விஷயங்களை சிலரால்தான் முடிக்க முடியும் எனும்போது அவரிடம் உதவி கேட்பதில் தவறு இல்லை. வீண் தயக்கமே உங்கள் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும். ஆகவே தயக்கத்தை தகர்த்தெறியுங்கள். எடுத்த காரியத்தில் விடாப்பிடியாக செயல்பட்டு வெற்றி பெறுங்கள்.
பொதுவாகவே மலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலம் உங்களுக்குப் பிடித்தமானதாகத் திகழும். அப்படியான சூழலில் அமைந்த தலங்களில், உங்கள் ராசிநாதனான செவ்வாயை வழி நடத்தக்கூடிய தெய்வத்தை நீங்கள் தரிசிக்கும்போது, உங்கள் வாழ்வு மலையளவு உயரும் என்பது உறுதி.
ஆமாம்! உங்கள் ராசிக்கு உகந்தவை மலைத் தலங்கள். அதிலும், முருகன் அருளும் மலைத்தலங்களைத் தரிசித்து வந்தால், சகல செளபாக்கியங்களும் கிடைக்கும். குறிப்பாக, பழநி திருத்தலம். தனித்தன்மை பெறவேண்டும் என்ற தாகத்தோடு முருகப்பெருமான் வந்து அமர்ந்து அருள்புரியும் அற்புதத் தலம் பழநி. ஆகவே, எப்போதும் உங்கள் உள்ளத்தில் பழநி முருகனை நிறுத்துங்கள். மேஷ ராசிக்காரர்கள் இந்தத் தலத்துக்கு எப்போது சென்று வந்தாலும் ஒரு மாற்றமும் ஏற்றமும் நிச்சயம் உண்டு.
அசுவினி: இந்த நட்சத்திரக்காரர்கள் மகான்களின் ஜீவ சமாதிகளைத் தரிசித்து வரலாம். திருச்செந்தூர் தலமும் உகந்தது.
பரணி: அழகர் மலைக்குச் சென்று கள்ளழகரைத் தரிசித்து வாருங்கள்.
கிருத்திகை முதல் பாதம்: நாகப் பட்டினம்-திருவாரூர் பாதையில் உள்ள சிக்கல் தலத்துக்குச் சென்று சிங்கார வேலனைத் தரிசித்து வழிபட்டால், நலன்கள் யாவும் கைகூடும்.
ரிஷபம்ராசி மண்டலத்தை காலபுருஷன் எனும் உருவமாகக் கொண்டால், மேஷ ராசி கபாலம் என்பதைப் போல், இந்த ரிஷப ராசி முகம் ஆகும். சகல கலைகளுக்கும் அழகியலுக்கும் அதிபதியான சுக்கிரன் இந்த ராசியின் அதிபதியாக வருவதால், இந்த ராசிக்காரர்கள் முக அழகுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். சுக்கிரன் உங்களுக்கு வசீகர தோற்றத்தைத் தருவார். புத்தக வாசிப்பு உங்களுக்குப் பிடித்தமான ஒன்று.
ரிஷப ராசியில் பிறந்த உங்களை எதிர்த்துப் போரிடுவது கடினம். உங்களை எதிர்ப்பவர்கள்தான் தோற்றுப் போவார்கள். எதிரிக்கு எப்போதும் சவாலாகவே இருப்பீர்கள். ஆனாலும், நீங்கள் இயல்பிலேயே சாதுவாகத்தான் இருப்பீர்கள்.
மற்றவர்களுக்கு உதாரண புருஷராகத் திகழ்வீர்கள். உங்களின் செயல்பாடுகள் மற்றவர்களுக்கு சிறந்ததொரு வழிகாட்டுதலைத் தரும். பொதுக் காரியங்களிலும் உங்களுக்கு மிகுந்த ஈடுபாடு இருக்கும். அதேபோல், எந்த ஒரு பொது விஷயத்திலும் வந்தோம் போனோம் என்று இல்லாமல், எல்லா வேலைகளையும் முன் நின்று செய்வீர்கள். எந்த விஷயத்திலும் தனக்கென காரியம் சாதிக்க நினைப்பது தங்களுக்குப் பிடிக்காது. உடன் இருப்பவர்களுடன் சேர்ந்து முன்னேறுவதே முன்னேற்றம் என்பது தங்களின் சித்தாந்தமாக இருக்கும்.
ராசிக்கு இரண்டாம் இடமான வாக்கு ஸ்தானத்தில் புதன் வருகிறார். ஆகவே, எதையும் சூட்சுமமாகப் புரியவைப்பதில் சமர்த்தர் நீங்கள். உங்களின் எண்ணத்தை முகக் குறிப்பாலேயே எதிரில் உள்ளவர்களுக்கு உணர்த்திவிடுவீர்கள். அதேபோன்று, மற்றவர்களைக் கணிப்பதிலும் நீங்கள் கில்லாடி. பால்ய கால நண்பர்கள் உங்கள் தொழிலிலும் வாழ்விலும் கூட்டாகப் பயணிக்க வாய்ப்பு உண்டு. அவ்வப்போது பழைய விஷயங்களை அசைபோடுவது உங்களுக்குப் பிடிக்கும்.
உங்கள் ராசிக்கு 3-வது ஸ்தானமான முயற்சி ஸ்தானத்துக்கு அதிபதி சந்திரன் என்பதால், ‘முயற்சி திருவினையாக்கும்’ என்றபடி முயற்சி செய்து முடித்துக் காட்டுவீர்கள். சகோதரர்களிடம் அதிகம் அக்கறை காட்டுவீர்கள். எல்லோருக்குமே பெற்ற அன்னையிடம் பாசம் உண்டு. ஆனால் நீங்களோ, அதையும் தாண்டி அவரிடத்தில் பெரும் பக்தி கொண்டிருப்பீர்கள். அவருக்கு ஒன்று என்றால், துடித்துப்போய்விடுவீர்கள்.தாயார் ஸ்தானத்தைக் குறிக்கும் சிம்ம ராசிக்கு சூரியன் அதிபதியாக இருப்பதால், உலகத்துக்கே ஒளி தரும் சூரியனைப் போல், உற்றார், உறவினர் எல்லோரையும் நேசிப்பீர்கள். அவர்களை அனுசரித்துச் செல்வீர்கள்.
உங்களுக்குப் பகைவர்கள் இருக்க மாட்டார்கள். அதற்காக, நமக்கு எதிரிகளே இல்லை என்றும் நீங்கள் புளகாங்கிதம் அடையமுடியாது. காரணம், உங்கள் பகைவன் உங்களுக்குள்ளேயே இருக்கிறான். ஆமாம், உங்களைப் பொறுத்தவரை உங்களுக்கு நீங்கள்தான் எதிரி. உங்கள் பேச்சு, செயல் அனைத்துக்கும் நீங்களே எதிர்பாராதபடி ஒரு பக்க விளைவு ஏற்படும். ஆகவே, பேசும்போதும் செயல்படும்போதும் கனிவும், அதீத கவனமும் தேவை.
உங்கள் ராசிக்கு 3-ம் இடமான கடகத்தில் குரு உச்சம் பெற்றிருக்கும் போது நீங்கள் பிறந்திருந்தால், திரைத் துறையில் சாதனை படைப்பீர்கள். இயற்கையான சூழலில் நன்றாக உறங்குவீர்கள்.
உங்களின் வாழ்க்கைத் துணைவர் உங்களைவிட வேகமாக இருப்பார். நிர்வாகத் திறமையில் அதீத திறமையுடன் திகழ்வார். அதேநேரம், சில விஷயங்களில் உங்களைப் புரிந்து கொள்ளாமல் வாக்குவாதம் செய்வார். பொறுத்துக் கொள்ளுங்கள். அவர் எதைச் செய்தாலும் உங்கள் நன்மைக்காகவே இருக்கும். சிறு வயதில் அனுபவம் இல்லாமல் சில தொழில்களில் ஈடுபட்டு, நஷ்டத்தை அடைந்திருப்பீர்கள். எனினும், அதன் மூலம் கிடைத்த அனுபவம் இனி உங்களுக்கு உதவியாக இருக்கும். நாற்பது வயதுக்கு மேல் வாழ்வில் எதிர்பாராத திருப்பங்கள் நிகழும்.
ரிஷபம் என்பது நந்திகேஸ்வரரைக் குறிப்பதால், பிரதோஷ காலத்தில் நந்தி தேவரின் இரண்டு கொம்புகளுக்கு இடையில் ஈசனை தரிசித்து வழிபடுவது விசேஷம். இதனால், உங்கள் வாழ்க்கை வளம் பெறும். நந்தியெம்பெருமானுக்கு திருமணம் செய்து வைத்த திருவையாறு திருத்தலத்துக்கு ஒருமுறை சென்று அருள்மிகு ஐயாறப்பரையும் அறம்வளர்த்த நாயகியையும் தரிசனம் செய்து, வழிபட்டு வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் சகல இன்னல்களும் நீங்கும்; இனியவை யாவும் நடந்தேறும். அதேபோன்று தொழிலில் பின்னடைவு, குடும்பத்தில் பிரச்னை, வேலையில் சச்சரவுகள் என்று மனதுக்கு வருத்தம் ஏற்படும் சூழலில், பசுவுக்கு அகத்திக் கீரை, வாழைப்பழம் கொடுங்கள். பிரச்னைகள் மெள்ள மெள்ள விலகும். புராணங்களில் பசு வழிபட்ட திருத்தலங்கள் குறித்த தகவல்கள் ஏராளம் உண்டு. அந்தத் தலங்களுக்குச் சென்று தரிசிப்பதாலும் நலன்கள் கைகூடும்.
கிருத்திகை 2,3,4-ம் பாதங்கள், ரோகிணி மற்றும் மிருகசீரிட நட்சத்திரத்தின் முதல் இரு பாதங்கள் இந்த ராசியைச் சேர்ந்தவை.
கிருத்திகை 2, 3, 4-ம் பாதங்கள்: சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில், திண்டிவனம் அருகில் உள்ள மயிலம் தலத்துக்குச் சென்று முருகனை வழிபடலாம்.
ரோகிணி: மயிலாடுதுறை அருகில் உள்ளது குத்தாலம். இங்கிருந்து சுமார் 5 கி.மீ.தொலைவில் உள்ள தேரழுந்தூர் சென்று ஆமருவியப்பனை வழிபட்டு வாருங்கள்.
மிருகசீரிடம் 1,2-ம் பாதங்கள்: சுவாமிமலையில் அருளும் ஸ்வாமிநாத ஸ்வாமியை வழிபட்டு வாருங்கள்; நலன்கள் யாவும் கைகூடும்.
மிதுனம்இரட்டையர்களைச் சின்னமாகக் கொண்ட மிதுன ராசியில் பிறந்த நீங்கள், எந்தவொரு விஷயத்தைச் செய்தாலும் உடனிருப்பவர்கள் என்ன சொல்வார்கள் என்பதை அறிவதற்காகக் காத்திருப்பீர்கள்.
எந்தவொரு பிரச்னையாக இருந்தாலும், சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல துல்லியமாக நீதி வழங்குவதில் வல்லவர்கள். நெருங்கிப் பழகிய நண்பர்களிடம்கூட உதவி கேட்கத் தயங்குவீர்கள். ‘எங்கேயாவது கேவலமாக நினைச்சுக்கப் போறாரு’ என்று தவிர்ப்பீர்கள். அலுவலக வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு ஆர்வத்துடன் செய்வீர்கள். பாராட்டு கிடைத்தாலும் மற்றவர்களை அனுசரித்துப் போகத் தெரியாது என்பதால், பதவி, சலுகைகள் பெறுவதில் சிற்சில தடைகள் ஏற்படலாம்.
வாக்கு ஸ்தானாதிபதி சந்திரன் என்பதால், வானத்தில் நிகழும் மாயாஜாலங்களைப் போல், உங்கள் மனதிலும் மாற்றங்கள் நிகழ்ந்தபடி இருக்கும். இந்த ஸ்தானம் செலவுகளையும் சேமிப்புகளையும் குறிக்கும் என்பதால், உங்களிடம் எவ்வளவு பணம் கொடுத்தாலும் சேமிக்கமுடியாது.
மூத்த சகோதர, சகோதரிகளிடம் உங்களுக்குப் பாசம் இருந்தாலும், இளைய சகோதர ஸ்தானம் என்னும் 3-ம் இடத்துக்கு சூரியன் அதிபதியாக வருவதால், இளைய சகோதர சகோதரிகளிடம் அதிக அன்பு காட்டுவீர்கள். உங்களுடைய மூத்த சகோதர சகோதரிகள் எடுக்கும் முடிவுகள் உங்களை எதிர்மறையாக பாதிக்கக்கூடும்.
உங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று சொல்லப்படும் 5-ம் இடத்துக்கு அதிபதியாக சுக்கிரன் வருகிறார். எப்போதும் இறையருள் உங்களுக்கு இருக்கும்.
உங்களின் உத்தியோக ஸ்தானத்துக்கு அதிபதியாக குரு வருவதால், ஒரே இடத்தில் பணி புரிய முடியாது. எங்கேயும் தேங்கி நின்று விடாமல், உங்களின் பயணம் தொடரும். உங்களில் சிலர் சுயதொழில் துவங்கவும் வாய்ப்பு உண்டு. எனினும், தொழிலின் நிமித்தம் குடும்பத்தைப் பிரிந்துசென்று வேறோர் இடத்தில் பணம் சம்பாதிக்க நேரிடும்.
மிதுனம் என்பதே இரட்டை என்று பார்த்தோம். ராசியாதிபதி புதனாக வருவதால், பெரும்பாலும் பெருமாள் கோயில்கள் உங்களுக்கு ஏற்றவையாக அமையும். அதிலும், ஒரே தலத்தில் இரட்டைப் பெருமாள் அருளும் தலமாக இருப்பின் மிகவும் விசேஷம்.
அவ்வகையில் நீங்கள் சென்று தரிசித்து வழிபடவேண்டிய திருத்தலம் திருத்தொலைவில்லி மங்கலம்.
திருநெல்வேலியிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது திருத்தொலைவில்லி மங்கலம். நூற்றெட்டு திவ்யதேசங்களில் இரண்டு திவ்யதேசங்கள் அருகருகே இருப்பது இங்கு மட்டும்தான்.
இரு கோயில்களையும் நம்மாழ்வார் மங்களாசாஸனம் செய்துள்ளார். முதலாவதான திருப்பதியில் எழுந்தருளும் பெருமாளின் திருப்பெயர் தேவப்பிரான் ஆகும். இரண்டாவதான திருப்பதியில் அருளும் பெருமாளின் நாமம் அரவிந்தலோசனன் என்பதாகும். சேர்ந்தே அருளும் இருவரையும் தரிசித்து வாருங்கள்; எண்ணிய காரியங்கள் யாவும் இனிதே நடந்தேறும்.
மிருகசீரிடம் கடைசி இரண்டு பாதங்கள், திருவாதிரை மற்றும் புனர் பூசம் முதல் மூன்று பாதங்கள் இந்த ராசியில் அடங்கும்.
மிருகசீரிடம் 3, 4-ம் பாதங்கள்: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளை வணங்கி வழிபடுங்கள்.
திருவாதிரை: சிதம்பரம் ஆடல் வல்லானை தரிசித்து வாருங்கள்.
புனர்பூசம் 1, 2, 3-ம் பாதங்கள்: கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் இருந்து சேலம் செல்லும் வழியில், சுமார் 3 கி.மீ. தொலைவிலுள்ள மணவாள நல்லூரில் அருளும் கொளஞ்சியப்பரைத் தரிசித்து வாருங்கள்; வளம் பெருகும்.
கடகம்நண்டு போன்ற அமைப்பில் முத்துச் சிதறலாக ஒளிரும் நட்சத்திரக் கூட்டமைப்பே கடகம் ஆகும். பன்னிரண்டு ராசிகளில் அதிக அளவு ஈர்ப்பும் வசீகரிக்கும் சக்தியும் பெற்றிருக்கும் ராசி இது.
நீங்கள் எந்தத் துறையில் பிரவேசித்தாலும், அங்கே உங்கள் அதிகாரத்தையும் ஆளுமையையும் நிலைநிறுத்துவீர்கள். உங்களுடைய அன்பான பேச்சாலும் நிர்வாகத் திறனாலும் அனைவரையும் உங்களின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவீர்கள். உங்களுக்கு மேலான அதிகாரத் தில் இருப்பவர்களையும் வலுவிழக்கச் செய்வீர்கள். உங்கள் ராசிநாதன் சந்திரன் மனோகாரகர் ஆவார். ஒருவரின் மனதை சந்திரன்தான் நிர்ணயிக்கிறது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நீங்கள் வெகு விரைவில் மற்றவர் மனதில் இடம் பிடித்துவிடுவீர்கள்.
நீங்கள் எடுத்த வேலையை முடிக்காமல் விடமாட்டீர்கள். உங்கள் 4-ம் வீட்டுக்கு அதிபதியான சுக்கிரன் கட்டடக்காரகராக இருப்பதால், அதிநவீனமாக வீடு கட்ட விரும்புவீர்கள். 6-ம் இடம் நோய், கடன், எதிரி ஸ்தானத்துக்கு உரியவர் குரு என்பதால், பொதுக் காரியங்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் உதவுவது உங்களுக்கு நன்மை தரும். இதுவே உங்களுக்குப் பரிகாரமாக மாறும் யோகத்தை அளிக்கும்.
அசையா சொத்துகளைப் பொறுத்த வரையிலும், மனைவி அல்லது பிள்ளைகள் பெயரில் இருப்பதுதான் நல்லது. உங்களுடைய வாழ்க்கைத் துணை பற்றிக் குறிப்பிடும் 7-ம் இடத்துக்கு அதிபதியாக சனி வருவதால், திருமண வாழ்க்கை சுவாரஸ்யமான திருப்பங்களுடன் இருக்கும். உங்களுடைய 8-ம் இடமான ஆயுள் ஸ்தானத்துக்கும் சனியே அதிபதி ஆதலால், தீர்க்காயுள் உண்டு.
10-ம் இடத்துக்கு உரிய ஜீவன ஸ்தானத்துக்கு அதிபதியாக மேஷ செவ்வாய் வருகிறது. உங்களுக்கு பிரபல யோகாதிபதியாகவும் செவ்வாய் இருக்கிறது. பெரிய பதவியிலும், வியாபாரத்திலும் சாதிக்க விரும்புவீர் கள். காவல்துறை, ராணுவம், கப்பல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஈடுபடுவீர்கள். 11-ம் இடமான மூத்த சகோதர ஸ்தானத்துக்கு பாதகாதிபதியான சுக்கிரன் வருவதால், உங்களால் மூத்த சகோதர சகோதரிகள் பலன் பெறுவார்களே தவிர, அவர்களால் உங்களுக்கு உதவிகள் கிடைக்காது.
சந்திரனின் ஆதிக்கத்தில் கடக ராசி வருகிறது. பொதுவாகவே, சந்திரனின் ஆளுமையில் உள்ளவர்களுக்கு அம்பாள் வழிபாடு விசேஷமானது. அவ்வகையில், நீங்கள் திருமீயச்சூர் லலிதா பரமேஸ்வரியை வழிபட்டு வரலாம். இத்தலம் மயிலாடுதுறை - திருவாரூர் சாலையிலுள்ள பேரளம் என்னும் ஊரில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.
சக்தி வழிபாட்டின் இதயத் துடிப்பு போன்றது லலிதா சகஸ்ரநாமம். இந்தத் தலத்தில் அம்பாளுக்கு லலிதா சகஸ்ரநாமம் சொல்லியே அர்ச்சனை ஆராதனைகள் நிகழும். அகத்தியர் லலிதா நவரத்ன மாலை எனும் அற்புத நூலை இங்குதான் இயற்றினார். இங்கு வந்து லலிதாம்பிகையின் அருட் தாரையில் சில கணங்கள் நின்றாலே போதும். உங்கள் வாழ்வு முழு நிலவாக மலரும்.
புனர்பூசம் 4-ம் பாதம், பூசம் மற்றும் ஆயில்யம் இந்த ராசியில் அடங்கும்.
புனர்பூசம் 4-ம் பாதம்: காஞ்சி காமாட்சியை வழிபட்டு வாருங்கள்.
பூசம்: குமரி பகவதியம்மனைத் தரிசித்து வருவது சிறப்பு.
ஆயில்யம்: ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளையும் வடபத்ரசாயியையும் வழிபட்டு வரம்பெற்று வாருங்கள்.
சிம்மம்உங்கள் ராசியின் அதிபதி ராஜகிரகமாகிய சூரியன் என்பதால், ராஜபோகத்துடன் இருக்க விரும்புவீர்கள். நீங்கள் ஒரு முடிவு எடுத்துவிட்டால், எந்தக் காரணத்தைக் கொண்டும் அதை மாற்றிக்கொள்வது என்பது உங்கள் அகராதியிலேயே இல்லை.
சிந்தனை, சொல், செயல் என்று அனைத்திலும் வேகம் காட்டும் நீங்கள் அதற்கான பலனையும் உடனே எதிர்பார்ப்பீர்கள். பின்னால் இருந்து குறை கூறுவதும், உடன் இருந்தே துரோகம் செய்வதும் உங்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது. உணவு விஷயத்தைப் பொறுத்தவரை, சூடாகவும் சுவையாக வும் இருக்கவேண்டும் என்றே விரும்புவீர்கள்.
இந்த ராசிக்கு 2-ம் இடமான தனம், குடும்பம், வாக்கு ஸ்தானத்துக்கு அதிபதியாக புதன் வருவதால், பணத்துக்குக் குறைவு இருக்காது. ஆனால், கையில் தங்காதபடி செலவுகள் தொடர்ந்துகொண்டே இருக்கும். புதன் பேச்சுக்கு அதிபதி என்பதால், யோசித்த அந்தக் கணமே பளிச்சென்று பேசுவீர்கள்.
சுக ஸ்தானம் மற்றும் தாயார் ஸ்தானமாகிய 4-ம் இடத்துக்கும் பாக்கிய ஸ்தானம் மற்றும் தந்தை ஸ்தானமாகிய 9-ம் இடத்துக்கும் செவ்வாயே வருகிறார். சூரியனும் செவ்வாயும் நட்பு கிரகங்கள் என்பதால், பெற்றோர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். அவர்களுடைய அன்பும் ஆதரவும் என்றும் உங்களுக்கு உண்டு.
5-ம் இடமான பூர்வபுண்ணிய ஸ்தானத்துக்கும், ஆயுள் ஸ்தானமாகிய 8-ம் இடத்துக்கும் குரு அதிபதியாக இருப்பதால் நல்ல குணங்களுடன் கூடிய பிள்ளைகள் பிறப்பார்கள்.
6 மற்றும் 7-ம் இடத்துக்கு அதிபதியாக சனி வருவதால், உங்களுடைய வாழ்க்கைத்துணை திறமைமிக்கவராக இருப்பார்.
படித்த படிப்புக்கும் செய்யும் வேலைக்கும் சம்பந்தம் இருக்காது. பெரும்பாலும் சிலரை வைத்து வேலை வாங்கும் தொழில்தான் அமையும். பெயர், பணம், புகழ் ஒன்றாகக் கிடைக்கும் துறை அல்லது பதவியைத் தேர்ந்தெடுத்து, கிடைக்கும்வரை காத்திருந்து சேருவீர்கள்.
சூரியன் சிவ கோத்திரத்தைச் சேர்ந்தவர். சிவனுடைய அம்சமாகவே சூரியன் விளங்குகிறார். சூரியன் நெருப்புக் குழம்பாகக் கொதிக்கும் கிரகம். இவ்வாறு பூலோகத்தில் சூரியனுக்கு நிகராக உள்ள ஒரு தலமெனில் அது திருவண்ணாமலையே ஆகும். கொழுந்துவிட்ட அக்னியானது கருணையின் பொருட்டு இங்கு மலையாகக் குளிர்ந்துள்ளது. சிவனே மலையாகவும், மலையே சிவமாகவும் பிரிக்கமுடியாதபடி விளங்குகிறது. சூரியன் எப்படி எல்லாவற்றுக்கும் மையமாக உள்ளதோ, அதுபோல பூமியினுடைய மையமாக திருவண்ணா மலை தலம் விளங்குவதாக ஸ்காந்த புராணம் விவரிக்கிறது.
ஏற்றம், ஏமாற்றம் என்ற மாறுபட்ட நிலையை நீங்கள் கடந்து எப்போதும் முன்னேற்றம் என்று உயர, அந்த உயரமான திருவண்ணாமலையையும், அருணாசலேஸ்வரரையும் வணங்கி வாருங்கள். உங்கள் எதிர்காலம் சிறக்க வழி பிறக்கும்.
மகம், பூரம் மற்றும் உத்திரம் 1-ம் பாதம் இந்த ராசியில் அடங்கும்.
மகம்: உங்கள் வாழ்க்கை சுகப்பட நீங்கள் தரிசிக்க வேண்டிய தலம், சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய ஸ்வாமி திருக்கோயில்.
பூரம்: நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றாலத்துக்குச் சென்று குற்றாலீஸ்வரரை வழிபட்டு வாருங்கள்.
உத்திரம் 1-ம் பாதம்: ஈஸ்வரன் ஆட்சீஸ்வரர் எனும் திருநாமத்துடன் அருள்புரியும் அச்சிறுப்பாக்கம் திருத்தலம் உங்களுக்கு விசேஷ பலன்களைப் பெற்றுத் தரும். திரிநேத்ர முனிவர் வழிபட்ட சிவலிங்கம் ஒன்றும் இங்கு உண்டு என்பது குறிப்பிடத் தக்கது.
கன்னிமிதுன ராசியைப் போலவே கன்னி ராசிக்கும் புதனே அதிபதி ஆகிறார். ஆனால், மிதுன ராசியினர் எதிலும் பட்டும் படாமலும்தான் இருப்பார்கள். மற்றவர்கள் பேசினால் பேசுவார்கள். கன்னி ராசி அன்பர்கள் தன்னைத் தானே அறிமுகப்படுத்திக்கொண்டு, மற்றவர்களை ஆழம் பார்ப்பதில் வல்லவர்கள்.
புதன் மட்டும்தான் தன்னுடைய ராசிகளில் ஒன்றான கன்னியிலேயே உச்சம் அடைகிறார். அதனால் உங்களுடைய திறமையை, தகுதியை பிறர் அங்கீகரிக்கத் தவறினால், உங்களுக்கு நீங்கள் மகுடம் சூட்டிக் கொள்வீர்கள். உங்களைச் சுற்றி நடக்கும், வெளிச்சத்துக்கு வராத அவலங்களைத் தட்டிக் கேட்பீர்கள். பிறரிடம் வேலை செய்தாலும், பெரும்பாலும் சொந்தத் தொழில் செய்யவே விரும்புவீர்கள். பணம் குறைவாகக் கிடைத்தாலும் மனதுக்குப் பிடித்த வேலையைச் செய்யவே விரும்புவீர்கள். எப்படிப் பார்த்தாலும் நீங்கள் தொடர்ந்து தொழிலாளியாகவே இருக்கமாட்டீர்கள். உங்களின் 2-ம் இடமான வாக்கு ஸ்தானத்துக்கு சுக்கிரன் அதிபதி என்பதால், உற்சாகமாகப் பேசுவீர்கள். உங்களுடைய ஆறுதலான சில வார்த்தைகள் மற்றவர்களின் வாழ்க்கை யில் நல்ல திருப்பத்தை ஏற்படுத்தும்.
11-ம் இடமான லாப ஸ்தானத்துக்கு சந்திரன் அதிபதியாக வருவதால், உங்களின் அறிவுத் திறமையைப் பயன் படுத்தி அதிக லாபம் சம்பாதிப்பீர்கள். உடலுழைப்பு என்பது குறைவாகவே இருக்கும். கன்னி ராசி என்றாலே பொதுவாக சாதாரணமாக இருப்பார் கள். கோபம் வந்தால்கூட வந்த உடனே மறைந்துவிடும். ஆனால், அதனால் சில நட்புகளை இழக்க நேரிடும். உங்களை யாரேனும் அவமானப்படுத்தினால் ஆவேசத்துடன் எதிர்ப்பீர்கள்.
உங்கள் வாழ்வில் எத்தனை இடர்கள் வந்தாலும், நீங்கள் செல்லவேண்டிய ஒரே தலம் திருவெண்காடு ஆகும். ஏனெனில், உங்களின் ராசிநாதனான புதன் பகவான் தனிச் சந்நிதியில் அருளாட்சி செய்து கொண்டிருக்கிறார். உங்கள் முன்கோபம் குறைய, இந்தத் தலத்திலுள்ள அகோர மூர்த்தியை தரிசியுங்கள். புதனுக்கு வித்யாபலத்தையும் ஞான பலத்தையும் அருளும் தாயான பிரம்ம வித்யாம்பிகை என்ற திருப்பெயரில் விளங்கும் அம்பாளை வணங்கி வாருங்கள். அகிலத்தையே அசைக்கும் ஈசனான இத்தலத்து தலைவனான ஸ்வேதாரண்யேஸ்வரரை எப்போதும் சித்தத்தில் நிறுத்துங்கள். வெற்றி எப்போதும் உங்கள் பக்கம்தான். இத்தலம் சீர்காழியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது.
உத்திரம் 2,3,4-ம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்கள் இந்த ராசியில் அடங்கும்.
உத்திரம் 2, 3, 4-ம் பாதங்கள்: சென்னை திருவலிதாயத்தில் ஸ்ரீதாயம்மை உடனுறை ஸ்ரீவல்லீசர் எனும் திருவலி தாயநாதரை வணங்குதல் நலம்.
அஸ்தம்: திருக்கோஷ்டியூரில் அருள்பாலிக்கும் திருமாமகள் நாச்சியார் உடனுறை ஸ்ரீஉரகமெல்லணையானை வணங்குதல் நலம்.
சித்திரை 1, 2-ம் பாதங்கள்: சிக்கலில் உள்ள சிவாலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீசிங்காரவேலரை கார்த்திகையில் வணங்குதல் நலம்.
துலாம்அழகு, கலை உணர்ச்சி போன்றவற்றுக்கு அதிபதியான சுக்கிரன் உங்கள் ராசிக்கு அதிபதியாக இருப்பதால், மற்றவர்களை விடவும் நீங்கள் அழகுக்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள். மற்றவர்களிடம் எந்த வேறுபாடும் பார்க்காமல், மனிதநேயத்துடன் பழகுவீர்கள்.
நீதி தேவன் என்று வர்ணிக்கப்படும் சனி, துலாம் ராசியில் உச்சமாவதால் நீதி, நேர்மைக்குக் கட்டுப்படுவீர்கள். இந்த இடத்தில் சூரியன் நீசம் அடைவதால், நாட்டு நிர்வாகத்தில் திறமை இருந்தாலும், வீட்டு நிர்வாகத்தைப் பொறுத்தவரை நீங்கள் பூஜ்யம்தான்.
உங்கள் ராசியின் 2-க்கும், 7-க்கும் அதிபதியாக செவ்வாய் வருவதால், தோன்றுவதைப் பேசுவீர்கள். பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லத் தெரியாமல் விழிப்பீர்கள். பொறுப்பு களை எப்போதும் வாழ்க்கைத் துணையிடம் ஒப்படைத்து விடுவீர்கள். உங்கள் ராசிக்கு அதிபதி சுக்கிராச் சார்யார் என்பதால், திருடனுக்கும் அறிவுரை கூறுவீர்கள்; பண்டிதர் களுக்கும் ஆலோசனை கூறுவீர்கள்.
பெரும்பாலும், கூட்டாகத் தொழில் செய்வதையே விரும்புவீர்கள். வாழ்க்கைத் துணைக்குத் தெரியாமல் உடன்பிறந்தவர்களுக்கு உதவுவதில் நீங்கள் சமர்த்தர்.
6-ம் இடமான எதிரி ஸ்தானத்துக்கு குரு அதிபதியாக இருப்பதால், உங்களுக்கான எதிரிகள் வெளியில் இல்லை. உங்களுக்கு நீங்கள்தான் எதிரி. அனுபவமில்லாத வயதிலேயே தொழில் தொடங்கும் தைரியம் இருக்கும். நஷ்டம் வந்தாலும் சமாளித்துக் கொள்ளும் பக்குவம் இருக்கும். ஏனெனில், யாரையும் சார்ந்திருக்கக்கூடாது என்கிற வைராக்கியம் இருக்கும். உங்கள் ராசிக்கு 10-ம் இடத்துக்கு உரியவராக சந்திரன் வருகிறார். சுக்கிரன் அதிபதியாக வருவதாலும், சந்திரன் பத்தாம் இடத்துக்கு உரியவராகவும் வருவதால், அழகு நிலையங்கள், பெரிய ஷாப்பிங் மால்கள், விளம்பர நிறுவனங்கள் என்று வேலை செய்வீர்கள். எதிலுமே வசீகரமும், கற்பனையும் இருக்கவேண்டுமென்று விரும்புவீர்கள். சுக்கிரனின் ஆதிக்கத்தில் துலாம் ராசி வருவதால் பெருஞ் செல்வத்தை நீங்கள் விரும்புவீர்கள். ஏற்கெனவே செல்வம் பெற்றிருப்போர், அதனுடன் தெய்வீக அருளையும் பெற்றால், அவர்களின் வாழ்க்கை மேலும் மேன்மை அடையும். அதற்காக நீங்கள் செல்லவேண்டிய தலம், நூற்றெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கோளூர் திருத்தலம். துலாம் ராசிக்காரர்கள் இத்தலத்துக்குச் சென்றுவர, பெருமாளின் அருளுடன் செல்வ வளம் பெறுவர் என்பது உறுதி.
சித்திரை 3, 4-ம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்கள் இதில் அடங்கும்.
சித்திரை 3, 4-ம் பாதங்கள்: சிதம்பரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீநடராஜப் பெருமானை அர்த்தஜாம பூஜையின்போது வணங்கவும்.
சுவாதி: அரக்கோணத்துக்கு அருகில் உள்ள சோளிங்கபுரத்தில் அருள்பாலிக்கும் சோளிங்கர் ஸ்ரீநரசிம்மப் பெருமாளை வணங்கினால் நன்மை உண்டாகும்.
விசாகம் 1,2,3-ம் பாதங்கள்: திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள எட்டுக்குடியில் உள்ள ஸ்ரீமுருகப் பெருமானை வணங்குங்கள்; வாழ்க்கை வளம் பெறும்.
விருச்சிகம்செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசியில் பிறந்த நீங்கள், ‘ரப்பர் மரங்களுக்கு ரணங்கள் ஒன்றும் புதிதல்ல’ என்பதுபோல், எத்தனை கஷ்டங்கள் வந்தாலும், உங்களை நீங்களே தேற்றிக் கொள்வீர்கள். எதையும் விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருப்பீர்கள். பதுங்கிப் பின்பு பாயும் புலியைப் போன்றவர்கள் நீங்கள்.
பூமிகாரகரான செவ்வாய் உங்களின் ராசி அதிபதியாக வருகிறார். எனவே, சிறிய அளவிலாவது உங்கள் பெயரில் சொத்து எப்போதும் இருக்கும். சிலருக்கு இரும்புச் சத்துக் குறைபாடு இருக்கும். உங்கள் ராசிக்கு ருண, ரோக, சத்ரு ஸ்தானமான 6-ம் இடத்துக்கு அதிபதியும் செவ்வாய் என்பதால், பலருக்கு ரத்த அழுத்தம், முடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். உங்களைப் பொறுத்தவரை, உங்களுடைய பேச்சே உங்களுக்கு எதிரி!
2-ம் இடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்துக்கு அதிபதி குரு ஆவார். வாழ்க்கையின் பிற்பகுதியில் பணவரவு, சேமிப்பு போன்றவை உண்டு. உங்கள் வாழ்க்கைத் துணையைப் பற்றிச் சொல்லும் 7-ம் இடத்துக்கு அதிபதி சுக்கிரன் என்பதால், உங்களுடைய வாழ்க்கைத் துணைவர் ஏதேனும் ஒரு வகையில் பிரபலமாக இருப்பார். கலைகளில் மிகவும் ஆர்வத்துடன் இருப்பார். உங்களிடம் மிகுந்த அன்போடு இருப்பதுடன், ஒரு நண்பரைப்போல் பழகுவார். சயன ஸ்தானம் என்னும் 12-ம் இடத்துக்கும் சுக்கிரனே அதிபதி என்பதால், நான்கு நாட்கள் வேலை செய்தால் இரண்டு நாட்கள் சுகமாக இருக்க விரும்புவீர்கள். அடிக்கடி வெளியூர்களுக்குச் சென்று வருவீர்கள். பயணங்களை விரும்பும் நீங்கள் அதற்காகவே பணம் சேர்ப்பீர்கள்.
விருச்சிக ராசிக்கு அதிபதியாக செவ்வாய் இருப்பதால், ஞானியர்களையும், மகான்களையும் தரிசித்து வணங்குவது நலம். மேலும், செவ்வாய்க்கு எதிர் குணங்களைக் கொண்ட அனுஷத்துக்கு அதிபதியாக சனியும், கேட்டைக்கு அதிபதியான புதனும் வருவதால், நன்றாக சுகபோகங்களுடன் வாழும்போதே வாழ்க்கையின் நிலையாமை குறித்தும் சிந்திப்பீர்கள். காடுகளிலும் மலைப்பகுதிகளிலும் சுற்றித் திரியும் சித்தர்கள் என்றால், உங்களுக்குக் கொள்ளைப் பிரியம். மிகப் பழைமையான தலங்களையும், அங்கிருக்கும் சித்தர்களின் ஜீவ சமாதிகளையும் தரிசித்து வழிபடுவது நல்லது.
அப்படி ஜீவசமாதி அமைந்திருக்கும் தலம்தான் நெரூர். இந்தத் தலத்தில் உள்ள சிவாலயத்துக்குப் பின்புறம்தான் சதாசிவ பிரம்மேந்திரர் என்னும் மகாஞானியின் ஜீவ சமாதி அமைந்துள்ளது.
உங்கள் ராசியில் சந்திரன் நீசமாவதால் சட்டென்று புத்தி வேலை செய்யாது. திடீரென்று பிரச்னை வரும்போது என்ன செய்வதென்று தெரியாமல் விழிப்பீர்கள். அதுபோன்ற சந்தர்ப்பங்களில், நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் எல்லாம் இத்தலத்தை தரிசித்த மாத்திரத்தில் நீங்கும். இத்தலம் கரூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது.
விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் இந்த ராசியில் அடங்கும்.
விசாகம் 4-ம் பாதம்: திருவனந்தபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீஹரிலட்சுமி உடனுறை ஸ்ரீஅனந்தபத்மநாபனை ஏகாதசி திதியில் வணங்குதல் நலம்.
அனுஷம்: காரைக்குடிக்கு அருகிலுள்ள குன்றக்குடியில் வீற்றிருக்கும் ஸ்ரீமுருகப்பெருமானை வணங்குதல் நலம்
கேட்டை: திருவேற்காட்டில் வீற்றிருக்கும் கருமாரியம்மன் மற்றும் சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆகியோரை வணங்கி வாருங்கள்; வாழ்க்கை செழிக்கும்.
தனுசுகுருவை அதிபதியாகக் கொண்ட உங்களின் ராசி தனுசு. எந்த ஒரு விஷயத்தையும் மாறுபட்ட கோணத்தில் அணுகுவீர்கள். எந்த ஒரு விஷயமானாலும், தொடர்ந்து போராடி வெற்றி பெறுவீர்கள்.
தனகாரகரான குருவின் ராசியில் நீங்கள் பிறந்திருப்பதால், பணத்தின் பின்னால் ஓடமாட்டீர்கள். ஏனெனில், உங்களுக்குப் பணத்தைவிட மனம்தான் பெரிதாக இருக்கும். நட்புக்கும் குணத்துக்கும் மட்டுமே மரியாதை தருவீர்கள். மிகப் பெரிய செல்வந்தரே ஆனாலும், உங்களை சிறிய அளவில் அவமதித்தார் எனில், அவரை அறவே ஒதுக்குவீர்கள்.
11-ம் இடமான லாப ஸ்தானத்துக்கு அதிபதியாக சுக்கிரன் வருவதால், ரியல் எஸ்டேட், கார் வாங்கி விற்பது போன்ற தொழில்கள் உங்களுக்கு லாபம் தரும். சயன, மோட்ச ஸ்தானமான 12-ம் இடத்துக்கு அதிபதி செவ்வாய் என்பதால், மகான்களின் ஜீவ சமாதிக்குச் சென்று வருவதிலும், சித்தர் வழிபாடுகளிலும் ஈடுபடுவீர்கள்.
தனுசு ராசிக்கு அதிபதியான குருவை கோதண்ட குரு என்றும் அழைப்பார்கள். எனவே, குறுக்கிடும் போராட்டாங்களால் அவ்வப்போது சந்தோஷத்தை இழந்து நிற்பீர்கள்.
இறைவனே மனிதனாக வாழ்ந்து, போராடி, அதில் வெற்றி பெற்று, அந்த வெற்றிக்குப் பிறகு மகிழ்ச்சிக் கோலத்தில் திளைத்த தலங்களுக்குச் சென்று வரும்போது உங்கள் வாழ்வின் அர்த்தம் புரியும். அதனால் அமைதியும் பெருகும். அப்படிப்பட்ட தலமே திருப்புட்குழி ஆகும். திருப்புள்குழி என்பதே மருவி திருப்புட்குழி என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தலம் ஜடாயு எனும் கழுகரசனுக்கு ஸ்ரீராமர் தன் கைகளாலேயே ஈமக் கிரியைகளை செய்த தலமாகும். மேலும், ராவணனை வதம் செய்த வெற்றிக் கோலத்தில், விஜயராகவன் எனும் திருநாமத்தோடு அருள்பாலிக்கும் தலமாகும். ஜடாயுவுக்காக அந்த வெற்றிக் கோலத்திலேயே ஸ்ரீதேவி, பூதேவியோடு காட்சியளிக்கிறார். அந்த கோதண்டராமனான விஜயராகவன் கோதண்ட குருவில் பிறந்த உங்கள் வாழ்வை நிச்சயம் மாற்றுவார்; நிம்மதியைத் தருவார்.
திருப்புட்குழி திருத்தலம் சென்னையில் இருந்து வேலூர் செல்லும் நெடுஞ்சாலையில் 80 கி.மீ. தொலைவில் இருக்கிறது. காஞ்சிபுரத்தில் இருந்து வேலூர் செல்லும் வழியில் 13 கி.மீ. தூரத்திலுள்ள பாலுசெட்டிசத்திரத்தில் இறங்கி, கோயிலுக்குச் செல்லலாம்.
மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம் ஆகிய நட்சத்திரங்கள் இதில் அடங்கும்.
மூலம்: சமயபுரத்தில் அருள்தரும் மாரியம்மனை பஞ்சமி திதியன்று வணங்கி வாருங்கள்; உங்கள் வாழ்க்கை நலம் பெறும்.
பூராடம்: காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீகாமாட்சி அம்மையை வணங்குதல் நலம்.
உத்திராடம் 1-ம் பாதம்: வயலூரில் வீற்றிருக்கும் ஸ்ரீமுருகப் பெருமானையும், ஸ்ரீபொய்யாமொழி கணபதியையும் வணங்கி வாருங்கள். நலமே விளையும்!
மகரம்மகரம் என்பது கடல் வீடு. கடலின் அலைகள் எப்படி அடுத்தடுத்து வந்துகொண்டு இருக்கின்றனவோ அப்படி உங்கள் மனதிலும் புதுப்புது எண்ணங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும். எப்போதும் மற்றவர்களிடம் 'புது ஐடியா இருந்தால் சொல்லுங்கள்' என்று கேட்டபடி இருப்பீர்கள். சோர்வு அடையமாட்டீர்கள். வாழ்க்கையில் தோல்வி அடைந்து அதலபாதாளத்துக்குச் சென்றாலும், மறுபடியும் வீறுகொண்டு எழுந்து நிற்பீர்கள். உங்கள் ராசிக்கு அதிபதி, இரக்க சுபாவத்தை அதிகம் கொடுக்கும் சனி என்பதால், மனிதநேயத்தோடு செயல்பட விரும்புவீர்கள்.
2-ம் இடமான தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்துக்கும் சனி அதிபதி என்பதால், அதிக அளவில் பணம் வைத்துக் கொண்டிருந்தாலும், திடீர் என்று ஏற்படும் செலவுகளுக்காகப் பணத்தைத் தேடுவீர்கள். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை ஏற்ற இறக்கங்கள் இருக்கவே செய்யும்.
வாழ்க்கைத் துணையைப் பற்றிச் சொல்லும் 7-ம் இடத்துக்கு அதிபதியாக சந்திரன் வருகிறார். உங்களுடைய வாழ்க்கைத் துணை கலாரசனை மிக்கவராக இருப்பார். உங்களைவிடவும் நிதானமாக யோசித்துச் செயல்படுபவராக இருப்பார். உங்களின் வேகமான செயல்பாடுகளை விவேகத்துடன் சமாளிப்பார். வாக்கு சாதுர்யம் பெற்றிருப்பார்.
10-ம் இடத்துக்கு அதிபதியாக சுக்கிரன் வருவதால், வாழ்க்கையின் மத்தியப் பகுதியில் சொந்தத் தொழிலில் இறங்குவீர்கள். கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலில் ஈடுபட்டு லாபம் சம்பாதிப்பீர்கள். எங்கே பணமும் புகழும் சேர்ந்து கிடைக்குமோ அங்கே வேலை செய்யவே விரும்புவீர் கள். உயர்ந்த பதவி யோகம் உண்டு. சுக்கிரனின் ஆதிக்கம் காரணமாக கலைத் துறையினருடன் எப்போதும் தொடர்பு கொண்டிருப்பீர்கள். உங்கள் ராசிக்கு 12-ம் இடத்துக்கு அதிபதியாக குரு இருப்பதால், உங்களின் செலவுகள் ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் இருப்பது உங்களுக்கு நன்மை தருவதாக அமையும்.
சனியின் பூரண ஆதிக்கத்தில் பிறந்திருக்கும் உங்களுக்குத் திருமாலிடம் மாறாத பக்தி இருக்கும். சிவாம்சத்தின் சாரமாக சனி இருந்தாலும், பெருமாளை வழிபடுவதையே மிகவும் விரும்புவீர்கள். கடல் என்பது சனி பகவானின் ஆதிக்கத்துக்கு உட்பட்டது. மகரத்தை மகரக் கடல் என்றே அழைப்பார்கள்.
பாற்கடலில்தான் மகாவிஷ்ணு சயனக் கோலம் கொண்டிருக்கிறார். எனவே, சயனக் கோலத்தில் மகா விஷ்ணு அரங்கநாதப் பெருமாளாக சேவை சாதிக்கும் கோயில்கள் அனைத்தும் நீங்கள் வழிபட உகந்தவை ஆகும். குறிப்பாக, திருக்கடல்மல்லை என அழைக்கப்படும் மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாளை வழிபட, சிறப்பான பலன்கள் உண்டாகும்.
உத்திராடம் 2, 3, 4-ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்கள் இதில் அடங்கும்.
உத்திராடம் 2, 3, 4-ம் பாதங்கள்: திருக்கோளூரில் அருள்புரியும் வைத்தமாநிதி பெருமாளை வழிபட, நலம் உண்டாகும்.
திருவோணம்: திருப்பதி வேங்கடேசப் பெருமாளை வணங்கி வாருங்கள்; நன்மைகள் உண்டாகும்.
அவிட்டம் 1, 2-ம் பாதங்கள்: சிக்கல் என்ற ஊருக்கு அருகிலுள்ள ஆவராணியில் வீற்றிருக்கும் ஸ்ரீரங்கநாதரை தரிசியுங்கள்.
கும்பம்ஒரு குடம் போன்ற அமைப்பில் உள்ளதே கும்பம். குடத்தைத் திறந்து பார்த்தால்தான் உள்ளே என்ன இருக்கிறது என்பது தெரியும். இந்த ராசியில் பிறந்த நீங்கள் உங்கள் மனதில் இருப்பதைப் பிறர் அறியாதபடி மறைத்து வைத்திருப்பீர்கள். தொடர்ந்து பத்து நிமிஷம் பேசிய பிறகுதான், உங்கள் மனதில் இருப்பதைப் பிறர் அறியமுடியும். உங்களிடம் பல திறமைகள் இருந்தாலும், சரியான முறையில் வெளிப்படுத்தத் தெரியாது. சரியான தூண்டுதல் இருந்தால் மட்டுமே, உங்கள் திறமைகளை வெளிப் படுத்த முடியும்.
உங்களுடைய பிள்ளைகளால் உங்கள் அந்தஸ்து உயரும். 5-ம் இடத்துக்கு உரிய புதனே உங்களின் 8-ம் இடமான கன்னிக்கும் அதிபதி என்பதால், உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நீண்ட ஆயுள் உண்டு.
ஜீவன ஸ்தானமாகிய 10-ம் இடம் விருச்சிகம். அதன் அதிபதி செவ்வாய். ஜோதிடம், மாந்த்ரீகம் போன்றவற்றில் ஈடுபாடு காட்டுவீர்கள். கெமிக்கல், மருந்துப் பொருட்கள் தயாரிப்பு போன்ற துறைகளில் பணிபுரிவீர்கள். 11-ம் இடம் லாப ஸ்தானம் ஆகும். கோதண்ட குரு என்னும் தனுசு குரு அந்த இடத்தின் அதிபதி என்பதால், அரசாங்கம் தொடர்பான தொழில்களில் ஒப்பந்ததாரராக இருந்து தொழில் செய்வீர்கள். எதிர்பாராத வகையில் மொத்தமாகப் பணம் வரும். அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கத்தோடு தொடர்புடையவர் களால் அதிக லாபம் பெறுவீர்கள்.
இந்த ராசியில் பிறந்த நீங்கள் எல்லா சக்திகளும் நிறைந்த ஆலயத்துக்குச் செல்லும்போது, இன்னும் பல பெரிய மாற்றங்கள் உங்கள் வாழ்வில் நிகழ்ந்தேறும். அப்படிப்பட்ட ஆலயமே கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆலயம். அமுதக் கும்பம் ஈசனின் திருவிளையாடலால் மகாமகக் குளத்தில் அமுதமாகக் கொட்டியது. ஈசன் அத்தலத் திருமண்ணில் தனது அருள் நீரைப் பொழிந்து பிசைந்து லிங்க உருவம் செய்தார். அந்த ஆதிலிங்கத்தினுள் பரமசிவன் பெருஞ்சோதி வடிவமாக உட்புகுந்தார். கும்பம் கும்பேஸ்வரர் ஆனது. பிரம்ம சிருஷ்டிக்கு முற்பட்டதால் ஆதிகும்பேஸ்வரர் எனவும், இன்னும் பல்வேறு திருநாமங்களோடும் பல யுகாந்திரங்களுக்கு முன்பு தோன்றிய கும்பேசுவரர் இன்றைக்கும் பேரருள் புரிகிறார். அம்பிகையின் திருநாமம் சர்வ மங்களங்களையும் அருளும் மங்களாம்பிகை ஆகும்.
கும்பராசியைச் சேர்ந்தவர்கள் இந்தப் புராணத்தைப் புரிந்துகொண்டு ஈசனை தரிசித்து வாருங்கள்.
அவிட்டம் 3, 4-ம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்கள் இதில் அடங்கும்.
அவிட்டம் 3, 4-ம் பாதங்கள்: மாயவரம்-கும்பகோணம் மார்க்கத்திலுள்ள க்ஷேத்ரபாலபுரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீபைரவரை தரிசியுங்கள்; வாழ்க்கை வளமாகும்.
சதயம்: சங்கரன்கோவிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீகோமதியம்மை உடனுறை ஸ்ரீசங்கரலிங்கரை வணங்கினால் நன்மை உண்டாகும்.
பூரட்டாதி 1, 2, 3-ம் பாதங்கள்: கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள பேரூரில் அருள்புரியும் ஸ்ரீமரகதவல்லி உடனுறை ஸ்ரீபட்டீஸ்வரரையும் ஸ்ரீநடராஜப் பெருமானையும் சென்று வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
மீனம்உங்கள் ராசியில் இருக்கும் பூரட்டாதி 3-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய மூன்று நட்சத்திரங்களும் வெவ்வேறான அம்சங்களையும், கதிர்வீச்சுகளையும் கொண்டவையாக அமைந்தி ருப்பதால், உங்கள் வாழ்க்கை பல நேரங்களில் பல கோணங்களில் இருப்பதாகக் காட்சி அளிக்கும்.
அடிக்கடி சிறுபிள்ளைத்தனமாக ஏதேனும் செய்துவிட்டுச் சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். குருவின் தனுசு ராசியில் பிறந்தவர்கள் ‘பட்...பட்’ என்று பேசுவார்கள். ஆனால், குருவின் மீன ராசியில் பிறந்த நீங்கள் இதமாகவும் இங்கிதமாகவும் சூழ்நிலை அறிந்து பேசுவீர்கள். தனுசு ராசியில் பிறந்தவர்கள் திட்டம் எதுவும் இல்லாமல் திடீர் முடிவு எடுப்பார்கள் என்றால், மீன ராசியில் பிறந்த நீங்கள் திட்டமிட்டுச் செயல்படுவீர்கள்.
தனகாரகனான குருவின் ராசியில் நீங்கள் பிறந்திருப்பதால், ‘பணத்தைவிட மனம்தான் பெரிது’ என்பீர்கள். யாராவது உங்களை அவமானப் படுத்தினால், வாழ்க்கை முழுவதுமே அவர்களை ஒதுக்கி வைத்துவிடுவீர்கள். உங்களின் இமேஜ் எங்கேயும், எப்போதும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக நடந்துகொள்வீர்கள்.
வாக்கு ஸ்தானத்துக்கு அதிபதியான செவ்வாயே உங்களின் 9-ம் அதிபதி யாகவும் வருகிறார். 9-ம் இடத்தை பாக்கிய ஸ்தானம் என்பார்கள். எனவே வாக்கினால், அதாவது பேசியே நிறைய பணம் சம்பாதிப்பீர்கள்.
பூர்வபுண்ணிய ஸ்தானம் எனப்படும் 5-ம் இடத்துக்கு அதிபதியாக சந்திரன் வருகிறார். உங்களுக்குக் குழந்தை பிறந்தவுடனேயே சட்டென்று வாழ்க்கைத்தரம் மேம்படும். உங்களில் பலர் நீண்ட தூரம் பயணம் செய்து வேலைக்குச் செல்வீர்கள். 8-க்கு உரியவன் சுக்கிரன் என்பதால், திடீர்ப் பயணங்கள் மேற்கொள்வதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கும். ஆயுள்காரகராகிய சனி துலா ராசியில் உச்சம் அடைந்திருந்தால் நீண்ட ஆயுள் உண்டு. 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்துக்கு அதிபதியாக செவ்வாய் வருவதால், தந்தையை முன்னுதாரணமாகக் கொண்டு முன்னேறப் பார்ப்பீர்கள். அப்பாவைப் பின்பற்றினாலும் வித்தியாசமாக முயற்சி செய்வதில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். ‘தந்தைக்கு நம்மிடம் இன்னும் கொஞ்சம் அக்கறை இருந்தால் நன்றாக இருக்குமே’ என்று அவ்வப்போது நினைத்து ஏங்குவீர்கள். 10-ம் இடமான ஜீவன ஸ்தானத்துக்கும் உங்களின் ராசி அதிபதியான குருவே இருப்பதால், உங்களில் பலரும் சுயதொழிலில் ஈடுபடவே விரும்புவீர்கள். சிலர் நீதி, கணக்குத் தணிக்கை, வங்கி, பதிப்பகம் போன்ற துறைகளில் புகழுடன் பணம் சம்பாதிப்பீர்கள். எத்தனை பணம் வந்தாலும் எடுத்து வைக்கமுடியாதபடி செலவுகளும் அதிகரிக்கும்.
கடலும், நீரும் அதைச் சார்ந்த பகுதிகளையுமே மீனம் குறிக்கிறது. உலகின் ஆதாரமும் நீர்தான். உலகின் முதல் உயிரும் மீன்தான். கடல், ஆறு, நதி என்று எல்லாவற்றுக்கும் அடிப்படை நீர்தான். நீர் பரவியிருக்கும் பரப்புக்கேற்ப வெவ்வேறு பெயர்கள். பஞ்சபூதங்களில் நீரின் தத்துவத்தைச் சொல்லும் கோயிலுக்குச் செல்லும் போது உங்களுக்கு நிச்சயம் மாற்றம் ஏற்படும். அப்படி நீர்த் தத்துவத்தை உணர்த்துவதும், பஞ்ச பூதங்களில் நீருக்கு உரிய தலமாக விளங்குவதும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம் ஆகும். கருவறையிலேயே நீர் ஏறும்; இறங்கும். இந்தத் தல அம்பாள் சகல உலகையும் ஆள்வதால் அகிலாண்டேஸ்வரி எனும் திருப்பெயரோடு அருள்பாலிக்கிறாள். மீன ராசியில் பிறந்தவர்கள் திருச்சிக்கு அருகிலுள்ள திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரரை வணங்குங்கள். கடலளவு அருளைப் பெற்றிடுங்கள்.
பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் இதில் அடங்கும்.
பூரட்டாதி 4-ம் பாதம்: பழநியில் அருள்பாலிக்கும் ஸ்ரீதண்டாயுத பாணியை வணங்கினால் பலன் உண்டு.
உத்திரட்டாதி: மருதமலையில் அருள்மழை பொழியும் ஸ்ரீமுருகப் பெருமானை வணங்கினால் நன்மை உண்டாகும்.
ரேவதி: கும்பகோணத்தில் அருள்பாலிக்கும் சீதாபிராட்டி உடனுறை ராமசுவாமி மற்றும் வீணை ஏந்திய ஆஞ்சநேயரை வணங்குதல் நலம்.