சர்க்கரை நோய் நாடி!
கம்ப்ளீட் மெடிக்கல் கைடு
மாறிவரும் வாழ்க்கை முறை, மருத்துவமனைக்குச் செலுத்த பணத்தைச் சேமிப்பது அத்தியாவசியம் என்கிறது. அந்தளவுக்கு தவிர்க்க முடியாமல் பெருகிக் கிடக்கின்றன
நோய்கள். நோய் எனும்போது, அதைப் பற்றிய அச்சத்தைவிட, விழிப்பு உணர்வே முதல் தேவை! இதுவே நோயை வெல்வதற்கான முதல்படி. வராமல் தடுப்பதற்கான வழியும்கூட. அப்படி ஒவ்வோர் இதழிலும் நோய்களைப் பற்றி அலசும் தொடர்... நோய் நாடி!
கடந்த இதழில் வெளியான சர்க்கரை நோய் பற்றிய அலசல், இந்த இதழிலும் தொடர்கிறது. கடந்த இதழில் பேசிய சென்னையைச் சேர்ந்த சர்க்கரை நோய் நிபுணர் கருணாநிதி மற்றும் சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் சர்க்கரை நோய் நிபுணர் தர்மராஜன் ஆகியோர் தந்த டிப்ஸ் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றன. கூடவே, சென்னை, ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் ’மருத்துவ உணவியல் துறை’ பேராசிரியை குந்தலா ரவி தரும் ஆலோசனைகளும்!
நினைவில் கொள்ளுங்கள்..!
சர்க்கரை நோய் உறுதியாகிவிட்டால்... கண், சிறுநீரகம், இதயம், நரம்பு உள்ளிட்டவற்றின் செயல்பாடு ஆரோக்கியமாக
இருக்கிறதா என்பதை பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.
கால்களை முகத்துக்கு இணையாக முக்கியத்துவம்
கொடுத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏதாவது புண் ஏற்பட்டால் ஆறுவது சிரமம். காலையே எடுக்க வேண்டிய நிலை வரலாம்.
காலில் நகம் வெட்டும்போது, ரொம்பவும் வளைத்து ஆழமாக வெட்டக்கூடாது.
மரத்திருக்கும் பாதங்களுக்கு
வலி தெரியாது என்பதால், கோயில் பிராகாரம் சுற்றுவது, செருப்பில்லாமல் வெயிலில் நடப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
விரதம் கூடாது.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பரிசோதிக்கும்
ஹெச்.பி.ஏ. 1 சி போன்ற பரிசோதனைகளை, மருத்துவர் பரிந்துரை இன்றியும்கூட மூன்று மாதங்களுக்கு
ஒரு முறை மேற்கொண்டு `செக்' செய்து கொள்ளலாம்.
நோய் வந்த பின் முழுமையாகக்
குணப்படுத்த முடியாது; ஆனால், கட்டுக்குள் வைக்க முடியும். வரும் முன் காக்க... உணவுப் பழக்கம், உடற்பயிற்சி முக்கியம்!
சுகர்ஃப்ரீ... சரியா, தவறா?
சர்க்கரை நோயாளிகளுக்கான பிரத்யேக இனிப்பு, சுகர்ஃப்ரீ. பொதுவாக சர்க்கரையில் சிம்பிள்,காம்ப்ளெக்ஸ்
என இரண்டு வகையான கார்போஹைட்ரேட்கள் உள்ளன. இதில் குளுக்கோஸ், சுக்ரோஸ் போன்ற சிம்பிள் கார்போஹைட்ரேட்,
சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டியவை. காம்ப்ளெக்ஸ்
கார்போ ஹைட்ரேட் அன்றாட உணவில் இருப்பது; அது அவசியத் தேவையும்கூட.
சுகர்ஃப்ரீயில் காம்ப்ளெக்ஸ்
கார்போஹைட்ரேட் மட்டுமே உள்ளது என்பதால் அதை சர்க்கரை நோயாளிகள் மாற்று இனிப்பாக எடுத்துக் கொள்வதில் பெரிதாக பிரச்னை இல்லை.
சுகர்ஃப்ரீயிலேயே கலோரி ஸ்வீட்னஸ், நான்-கலோரி ஸ்வீட்னஸ் என இரண்டு வகைகள் இருக்கின்றன. சுக்ரோஸ் கலந்திருக்கும் நான்-கலோரி ஸ்வீட்னஸ்தான் பரிந்துரைக்க ஏற்றது. கலோரி ஸ்வீட்னஸ் வகை தவிர்க்க வேண்டியது.
இன்சுலின் என்பது என்ன?
இன்சுலின் என்பது, தைராய்டு போல உடலில் சுரக்கும் ஒரு ஹார்மோன். தைராய்டு சுரப்பில் பிரச்னை உள்ளவர்கள் தைராய்டு மாத்திரை எடுத்துக் கொள்வதுபோல, உடலில் இன்சுலின் சுரப்பு இல்லாதபோது அல்லது நின்றுபோகும்போது, இன்சுலின் ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இன்சுலின் என்பது ஒரு புரதம். அது இன்னும் மாத்திரை வடிவில் வராததால், ஊசியே ஒரே வழி.
சர்க்கரை பாதிப்பால் இன்சுலின் போடும் நிலைக்குத் தன் உடல் வரும்போது, பயத்தில் அதைத் தள்ளிப்போடுவார்கள் சிலர். இதனால் நோய் முற்றி, விளைவுகள் பெரிதாகும். எனவே, இன்சுலினைத்
தவிர்க்க நினைக்க வேண்டாம்.
கோதுமையே சிறந்தது...
இது உண்மையா?
சர்க்கரை நோயாளிகள் சிலர், சாதத்தில் கார்போஹைட்ரேட் இருக்கிறது என்று அதை ஒதுக்குவார்கள்.
அதில் இருப்பது உடலுக்குத் தேவையான காம்ப்ளெக்ஸ்
கார்போஹைட்ரேட். எனவே, மதியம் ஒருவேளையாவது சாதம் எடுத்துக்கொள்வது நல்லது. நார்மல் எடையில் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு ஒன்று முதல் ஒன்றரை கப் சாதம் சாப்பிடலாம். சிலர் இட்லி, தோசையைத் தவிர்த்து சப்பாத்தியை
நாடுவார்கள். உண்மையில் சப்பாத்தியிலும் இட்லி, தோசை, சாதத்தில் உள்ள சத்துக்களே உள்ளன. ஆனால், நமக்குப் பழகிப்போன இந்த உணவுகள் அளவுக்குச் சப்பாத்தியை சாப்பிட முடியாமல் அதன் அளவைச் சுருக்குவோம் என்பதாலேயே அது பரிந்துரைக்கப்படுகிறது. தோசை, இட்லி, சாதத்தை அளவாகச் சாப்பிட்டால், சப்பாத்தி பத்தியம் தேவையில்லை.
அரிசி உணவுகளோ, கோதுமை உணவுகளோ... எதுவாக இருந்தாலும், அந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது அந்த அளவுக்கு இணையாகவோ, அல்லது கூடுதலாகவோ காய்கறிகளையும் சேர்த்துக்கொள்வது நல்லது. அப்போதுதான்
ஹார்போஹைட்ரேட்டின் அளவானது குறைவாக இருக்கும். முழுமையாக அரிசி அல்லது கோதுமை உணவுகளை மட்டுமே திணித்தால், சர்க்கரையின் அளவு அதிகரிக்கவே
செய்யும்.
ஓட்ஸ் கஞ்சி... நோ!
தரமான ஓட்ஸில் நிறைய நார்ச்சத்தும், காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்டும் இருக்கும். அதனால், ஓட்ஸ் சர்க்கரை நோயாளிகளுக்கு
ஏற்றதே. ஆனால், அதைக் கஞ்சியாகச் செய்து சாப்பிடும்போது வேகமாக உடலில் பரவி, சீக்கிரம் செரித்து, சீக்கிரம் பசியைத் தூண்டும். எனவே, ஓட்ஸை தோசை, அடையாகச் செய்து சாப்பிடலாம்.
சர்க்கரை நோய் பாதிப்பில் இருப்பவர்கள் கவனத்துக்கு..!
கம்பு, பார்லி, அரிசி, ஓட்ஸ், சோளம், அவல், மக்காச்சோளம்,
கேழ்வரகு, கோதுமை.. போன்ற தானியங்களை அளவோடு சாப்பிட வேண்டும்.
பருப்பு வகைகளில்.. கடலைப்பருப்பு, துவரம்பருப்பு,
பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு,
பொட்டுக்கடலை, பட்டாணி, காராமணி.. போன்றவற்றை தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ளலாம்.
பாகற்காய், வெள்ளை முள்ளங்கி, தக்காளி, கொத்தவரங்காய், காராமணி, வெள்ளரிக்காய்,
அவரை, முருங்கை, கத்திரிக்காய், கோவைக்காய், வெண்பூசணி, முட்டைகோஸ், வாழைப்பூ, வாழைத் தண்டு, பீர்க்கங்காய், பரங்கிக்காய்,
சீமை கத்திரிக்காய்,
குடமிளகாய், நூல்கோல், பப்பாளிக்காய், வெண்டைக்காய்.. போன்றவற்றில்
5 சதவிதத்துக்கும் குறைவான மாவுச்சத்து இருப்பதால்.. தேவையான அளவுக்கு இவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
பச்சைப் பட்டாணி, பீட்ரூட், கேரட், சேப்பங்கிழங்கு, உருளைக்கிழங்கு, மரவள்ளி, சேனை, கருணைக்கிழங்கு.. போன்றவற்றில்
5 முதல் 10 சதவிகிதம் மாவுச்சத்து கலந்திருப்பதால்.. அளவோடு உட்கொள்ள வேண்டும்.
பழங்களைப் பொறுத்தவரையில் தினமும் ஏதேனும் ஒரு பழத்தை கட்டாயம் சாப்பிடவேண்டியது அவசியம். அதிலும் ஜூஸ் போட்டு குடிக்காமல்,
`கட்' செய்தோ அல்லது கடித்தோ சாப்பிடுவது
மிக நல்லது. பழங்களில்.. சாத்துக்குடி (1), கொய்யா (1), பப்பாளி (2 அல்லது 3 பீஸ்), நெல்லி (4 அல்லது 5), அன்னாசி (1 பீஸ்), பேரிக்காய் சிறியது, ஆப்பிள் சிறியது, திராட்சை 50 கிராம், நாவல்பழம் 10, மாதுளை சிறியது 1... என தினமும் ஏதேனும் ஒரு வகையை மட்டும் சாப்பிடுவது மிக அவசியம்.
மாமிசத்தைப்
பொறுத்தவரைக்கும் ஆடு, மாடு போன்றவற்றை முற்றிலும் தவிர்ப்பது நலம். மீன் மற்றும் கோழி சாப்பிட நினைப்பவர்கள் 75 கிராம் அளவுக்கு வாரத்தில் இரண்டு முறை சாப்பிடலாம். அதை ஒருபோதும் எண்ணெய் கலந்து வறுவலாகச் சாப்பிடுதல் கூடாது. குழம்பாகச் சாப்பிடலாம். முட்டை சாப்பிட நினைப்பவர்கள் வாரத்துக்கு இரண்டு என எடுத்துக்கொள்ளலாம். ஆனால், மீன், கோழி சாப்பிடும் அன்று முட்டை கூடாது.
பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை, முந்திரி, வால்நட், பேரீச்சை... போன்றவற்றை வாரத்துக்கு ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொள்ளலாம்.
சர்க்கரை, வெல்லம், குளுக்கோஸ், தேன், குளிர்பானம், சாக்லேட், க்ரீம் கலந்த கேக் வகைகள், கரும்பு, சத்து பவுடர்கள்.. போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும்
No comments:
Post a Comment