About Me

My photo
I am an IT professional, Nowadays our Lifestyle is changed a lot and of course we are chasing money. In India More than 7 crore people affected by Diabetes, High Cholesterol and infertility due to their Poor Food Habits &amp Lifestyle. This Blog is very useful for youngsters to lead good Lifestyle and be healthy and students to choose career courses.Work hard, but make time for your love, family and friends. Nobody remembers Powerpoint presentations on your Final Day.I believe Life is ours and we only Live our Life.... Thanks for visiting and welcome you to visit again. WHO LOVES GOD ARE SEARCHING GOD, WHO LOVES PEOPLE ARE LIVING AS GOD - SK ( Reach me @ +91 9791139942 to lead Healthy Family Life )

Monday, 9 April 2012

10 Chicken Recipes for Bachelor's Cooking

'முனியாண்டி விலாஸ்' நாட்டு கோழி குழம்பு

நாட்டுக்கோழியின் ருசியே அலாதியானது. அதன் சுவையும், மணமும் மதுரை மாவட்டத்தில் உள்ள பிரியாணி கடைகளில் தயாராகும் ஸ்பெசல் குழம்பில் தெரிந்துவிடும். கிராமப்பகுதிகளில் கை, கால் உடைந்து கட்டுப்போட்டு படுத்திருப்பவர்களுக்கு நாட்டுக்கோழி அடித்து நல்லெண்ணெய் ஊற்றி சூப் குடிக்க கொடுப்பார்கள் அந்த அளவிற்கு சத்தானது நாட்டுக்கோழி. நாவில் நீர் ஊறச் செய்யும் நாட்டுக்கோழியை சமைத்துப் பாருங்களேன்.

தேவையான பொருட்கள்

நாட்டுக்கோழி - 1 கிலோ
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி – 3
தேங்காய் பால் - 1 கப்
மஞ்சள் தூள் – கால் டீ ஸ்பூன்
குழம்பு மசாலா தூள் – 3 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீ ஸ்பூன்
மல்லி தூள் – 2 டீ ஸ்பூன் தேக்கரண்டி
சோம்பு - 1 டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1கொத்து
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – 4 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

மசாலா செய்முறை

சின்ன வெங்காயத்தை உரித்து பொடியாக நறுக்கி வைக்கவும். தக்காளியை நறுக்கி வைக்கவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். இத்துடன் பாதி அளவு வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் இத்துடன் மிளகாய் தூள், மல்லி தூள், சேர்த்து நன்றாக வதக்கவும். ஆறவைத்து மிக்ஸிசியில் மசாலாவாக நைசாக அரைக்கவும்.

குழம்பு செய்முறை

நாட்டுக்கோழியை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மீதமுள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதில் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். மஞ்சள் தூள், குழம்பு மசாலா சேர்த்து வதக்கவும். இதில் கோழியை சேர்த்து நன்றாக கிளறவும். அப்போது தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும். சிறிது நேரம் விசில் போடாமல் மூடி வைக்கவும்.

5 நிமிடம் கழித்து குக்கரை திறந்து அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து கிளறவும். இதனுடன் தேங்காய்பால் சேர்த்து குக்கரை மூடி போட்டு விசில் விடவும். நாட்டு கோழி என்பதால் 5 விசில் வரை விடலாம், அப்பொழுதுதான் நன்றாக வெந்து சாப்பிட சுவையாக இருக்கும். விசில் இறங்கின உடன் மல்லித்தழை தூவவும். காரசாரமான நாட்டுக்கோழி தயார். சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிடலாம். பிரியாணிக்கு ஏற்ற சைடு டிஸ் இது.
-------------------------------------------------------------
மிளகு தேங்காய்பால் சிக்கன் கிரேவி

கோழிக்கறியை மிதமான காரத்தில் சாப்பிட விரும்புபவர்களுக்கு மிளகு, தேங்காய்ப்பால் சிக்கன் கிரேவி ஏற்றது. குழந்தைகளும் வயதானவர்களும் கூட இதனை சாப்பிடலாம். சுவையானதும் சத்தானதும் கூட.

தேவையான பொருட்கள்

சிக்கன் – அரைக்கிலோ

சின்னவெங்காயம் - 100 கிராம்

தக்காளி- 2

மிளகுதூள் – 4 டீஸ்பூன்

சீரகத்தூள் – 2 டீஸ்பூன்

வரமிளகாய் – 4

இஞ்சி பூண்டு விழுது – 2 டீ ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 டீ ஸ்பூன்

தயிர் – 3 டீஸ்பூன்

தேங்காய்பால் – ஒரு கப்

உப்பு தேவையான அளவு

கறிவேப்பிலை ஒரு கொத்து

மல்லித்தழை சிறிதளவு

எண்ணெய் – 3 டீ ஸ்பூன்

சிக்கன் கிரேவி செய்முறை

சிக்கனை பொடியாக நறுக்கி சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து கழுவி வைக்கவும். அத்துடன் உப்பு, தயிர், சிறிதளவு இஞ்சி பூண்டு சேர்த்து அரைமணிநேரம் ஊறவைக்கவும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும். அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

தக்காளியை சேர்த்து குழைய வேகவிடவும். இத்துடன் ஊறவைத்த சிக்கனை சேர்த்து கிளறவும். இதோடு வரமிளகாயை கிள்ளிப்போடவும். சீரகம், மிளகுத்தூளை சேர்த்து நன்றாக கிளறவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடிபோட்டு வேகவிடவும்.

சிக்கன் ஊறவைத்ததால் வேகமாக வெந்துவிடும். சிக்கன் வெந்த உடன் அத்துடன் தேங்காய்பால் சேர்க்கவும். ஸ்டவ்வை மிதமாக எரியவிடவும். சிக்கன் கிரேவி பதத்திற்கு வந்த உடன் மல்லித் தழை தூவி இறக்கவும்.

மிளகு தேங்காய்பால் கிரேவி தயார். சூடான சாதத்தில் போட்டு சாப்பிடலாம். சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ள ஏற்றது. காரம் குறைவாக இருப்பதால் குழந்தைகளும் நன்றாக சாப்பிடுவார்கள்.
-----------------------------------------------------------------------

செட்டிநாடு சிக்கன் பிரியாணி

பிரியாணி என்ற உணவு உலகளாவிய அளவில் பிரசித்தி பெற்றது. பண்டைய காலத்தில் இருந்தே ஊண்சோறு என்ற பெயரில் போரில் வெற்றி பெற்றவர்களுக்கு தயாரித்து அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமாய் பிரியாணி தயாரிக்கின்றனர். செட்டிநாடு பகுதிகளில் தயாரிக்கும் பிரியாணி அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணப்படுகிறது.

தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி - அரைகிலோ
சிக்கன் - 1/2 கிலோ (பெரிய துண்டுகள்)
பெரிய வெங்காயம் – 2
தக்காளி - 3
பச்சை மிளகாய் – 5
இஞ்சி பூண்டு விழுது – 3 தேக்கரண்டி
தேங்காய் பால் – 2 கப்
தண்ணீர் – 3 கப்
கொத்தமல்லி, புதினா - 1/2 கப்
தயிர் - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ் பூன்
மிளகாய் தூள் - 1/2 டீ ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/4 டீ ஸ்பூன்
பட்டை - 2 துண்டுகள்
கிராம்பு - 5
பிரியாணி இலை - 1
ஏலக்காய் - 3
எண்ணெய் - 100 மில்லி
நெய் - 3 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு

பிரியாணி செய்முறை

அரிசியை கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும். தேவையான பொருட்களை எடுத்து தயாறாக வைக்கவும்.

முதலில் சிக்கனை சிறிதளவு உப்பு, ஒரு டீ ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது சிறிதளவு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து தண்ணீர் அரைகப் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும் வரை வேகவிடவும். பின்னர் சிக்கனை தனியாக எடுத்து வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் 2 டீ ஸ்பூன் தேக்கரண்டி நெய் விட்டு காய்ந்ததும் பச்சை மிளகாயை முழுதாக போட்டு லேசாக மூடிவைக்கவும். பின்னர் பட்டை, பிரியாணி இலை, லவங்கம், ஏலக்காய் போட்டு பொரிய விடவும். இதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் இதில் நறுக்கிய தக்காளி சேர்த்து குழய வதக்கவும்.

இத்துடன் இத்துடன், மிளகாய் தூள், கரம் மசாலாதூள், உப்பு, தயிர் சேர்த்து கிளறவும். நன்றாக குழைந்து மசாலா வாசனை போனபின்பு, வேகவைத்த கோழியை சேர்த்து கிளறவும்.

இத்துடன் தண்ணீர், தேங்காய்ப்பால் சேர்த்து கொதி வந்ததும் அரிசியை சேர்த்து மூடி விசில் போடாமல் முக்கால் பாகம் வேக விடவும். இப்போது அதன் மேல் புதினா, மல்லித்தழை தூவி, ஒரு டீ ஸ்பூன் நெய் சேர்த்து மிதமான தீயில் 15 நிமிடம் தம் போடவும்.

சாதம் முழுதாக வெந்ததும் இறக்கவும். சுவையான செட்டிநாடு சிக்கன் பிரியாணி தயார். இத்துடன் தயிர் ரைதா தொட்டுக்கொள்ள இருந்தால் சுவை கூடுதலாக இருக்கும். இந்த வகையான சிக்கன் பிரியாணி காரம் குறைவாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
--------------------------------------------------------------

பட்டர் சிக்கன் மசாலா

வெண்ணெயில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. சிக்கனில் புரதம் நிறைந்துள்ளது சிக்கனை வெண்ணெய் சேர்த்து சமைப்பது கூடுதல் சுவையோடு சத்தானதும் கூட பட்டர் சிக்கன் மசாலா கிரேவி தற்போது ஓட்டல்களில் பிரசித்தி பெற்ற டிஷ் ஆகும். இதற்கு குழந்தைகள் மத்தியில் வரவேற்பு உள்ளது. வீட்டிலும் எளிதாக செய்யலாம்.

தேவையான பொருட்கள்

எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் – 3
தக்காளி – 4
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
தயிர் – 200 மிலி
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
வெண்ணெய் – 50 கிராம்
முந்திரி விழுது - 2 டீஸ்பூன்
கசூரி மேத்தி - 1 டீஸ்பூன் ( காய்ந்த வெந்தைய இலை)
உப்பு - 1 டீஸ்பூன்
சிவப்பு கலர் - 1/2 டீஸ்பூன்
பட்டை, லவங்கம், ஏலக்காய் – தாளிக்க

பட்டர் சிக்கன் செய்முறை

சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் தயிர், கறிமசாலா, உப்பு, கசூரி மேத்தி, சிவப்பு கலர் இவற்றை நன்கு கலந்து சிக்கனில் தடவி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த சிக்கனை நன்றாக வேக வைக்கவும். மைக்ரோவேவ் ஓவன் இருந்தால் இருபுறமும் நன்றாக வேகவைத்து எடுக்கவும்.

கடாயில் வெண்ணையை ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். இப்போது நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி இவை சேர்த்து வதக்கவும். தொடர்ந்து தனியாத்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், மிளகாய்த் தூள், போதுமான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். சிக்கன் ஊற வைத்த மசாலா கலவை மீதமிருந்தால் அதையும் சேர்த்துக் கொள்ளவும். மசாலா கலவை வேக தேவையான நீர் விடவும்.

தயார் செய்த மசாலா கலவையுடன், வெந்த சிக்கனை சேர்த்து கிளறவும். பின்னர் மிதமான தீயில் வேக விடவும். பட்டர் சிக்கன் மசாலாவை இறக்கு முன், அரைத்த முந்திரி விழுதையும் சேர்த்துக் கிளறி இறக்கவும். நாவில் நீர் ஊறச் செய்யும் சுவையான பட்டர் சிக்கன் மசாலா ரெடி. இது புரோட்டா, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.
-----------------------------------------------

சுவையான நெத்திலி மீன் கிரேவி

தேவையான பொருட்கள்நெத்திலி மீன் - கால் கிலோ
சின்ன வெங்காயம் – 100 கிராம் (பொடியாக நறுக்கியது)
கனிந்த தக்காளிப்பழம் - ஐந்து
புளி - ஒரு எலுமிச்சை அளவு
தேங்காய் அரைத்தது – ஒரு கப்
மிளகாய் தூள் – 3 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீ ஸ்பூன்
தனியாத்தூள் – 3 டீ ஸ்பூன்
நல்ல எண்ணெய் – 5 டீ ஸ்பூன்
கடுகு – சிறிதளவு
சீரகம் – சிறிதளவு
வெந்தயம் – 1 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு

நெத்திலி சுத்தம் செய்யும் முறை

மீனின் தலையை கிள்ளி அப்படியே வயிற்று பகுதியில் கட்டை விரலால் கீறி தலையோடு சேர்த்து வயிற்றில் உள்ள கழிவுகளை மீனிலிருந்து பிரித்தெடுக்கவும். அனைத்து மீன்களையும் நன்கு சுத்தம் செய்த பின்னர் இரண்டு முறை தண்ணீர் ஊற்றி கழுவவும். பின்னர் மீன்களின் மீது இரண்டு ஸ்பூன் நல்லெண்ணை, ஒரு டீ ஸ்பூன் உப்பு போட்டு கலந்து வைக்கவும். இதனால் தேவையற்ற மண், அழுக்கு இருந்தலும் வெளியேறிவிடும். மீன்களில் உப்பு பிடித்து சுவை கூடுதலாக இருக்கும்.

கிரேவி செய்முறை

அகலமான வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை போட்டு பொரியவிடவும். சிறிது நேரம் வதக்கவும்.

அடுத்து பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும். வதங்கியதும் கனிந்த தக்காளிப் பழத்தை பிழிந்து விடவும். பின்னர் நன்றாக கிரேவியாகும் வரை வதக்கவேண்டும். இந்த கலவையில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, தனியா தூள் சேர்த்து மிதமான தீயில் ஐந்து நிமிடம் வதக்கவும் மசாலா வாடை போனதும் புளியை கெட்டியாக கரைத்து ஊற்றவும்.

புளி கொதித்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்த உடன் ஸ்டவ்வை மிதமாக வைத்து மீனை போடவும். 5 நிமிடம் கழித்து ஸ்டவ்வை நிறுத்திவிடவும். கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவையான நெத்திலி மீன் கிரேவி ரெடி.

இந்த குழம்பிற்கு கடைசியில்தான் மீனைப் போடவும் இல்லையென்றால் கரைந்து விடும். அதேபோல் புளி தேவையெனில் சேர்க்கவும். இல்லையெனில் கூடுதலாக ஒரு தக்காளிப் பழம் சேர்த்தால் போதுமானது.
---------------------------------------------

மிளகு சிக்கன் டிக்கா

தேவையான பொருட்கள்எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ
மிளகு தூள் – 5 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது - 4 டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது – 4 டீ ஸ்பூன்
எண்ணெய் – 100 மிலி
தயிர் – 200 மிலி
உப்பு - கால் டீ ஸ்பூன்
எலுமிச்சை சாறு – சிறிதளவு

செய்முறை

சிக்கனை மஞ்சள் தூள் போட்டு நன்றாக கழுவவும். அதில் இஞ்சி பூண்டு விழுது, சிறிது உப்பு போட்டு முப்பது நிமிடம் ஊற வைக்கவும்.

பின்னர் தயிரில் சிறிதளவு உப்பு, அரைத்த பச்சை மிளகாய், பொடித்த மிளகு போட்டு கலக்கி ஏற்கனவே ஊற வைத்த சிக்கனில் போட்டு எல்லாவற்றையும் கலந்து மறுபடியும் முப்பது நிமிடம் ஊற வைக்கவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து லேசாக எண்ணெய் ஊற்றி அதில் ஊறவைத்த சிக்கனை மட்டும் தனியாக எடுத்து வேகவைக்கவும். மூடி போட்டு மிதமான தீயில் எரிய விடவும். 5 நிமிடம் வெந்த உடன் சிக்கனை திருப்பி விடவேண்டும். பின்னர் சிக்கன் நன்றாக வேகும் வரை திருப்பி விட வேண்டும். லேசாக எண்ணெய் விட்டாலே போதும் அதிக எண்ணெய் தேவையில்லை.

சிக்கன் நன்றாக வெந்த உடன் தட்டில் எடுத்து எலுமிச்சை சாறு விடவும். வாசனை சூப்பராக இருக்கும். சுவையான சிக்கன் டிக்கா ரெடி. இதை மைக்ரோவேவ் ஓவனிலும் செய்யலாம். வாணலியிலும் டீப் ப்ரை செய்யலாம்.
--------------------------------------

சிக்கன் லெக் பீஸ் ப்ரை

குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமானது சிக்கன். புரதச்சத்து நிறைந்தது. அதுவும் லெக் பீஸ் வறுவல் என்றால் ஆர்வமுடன் கையில் பிடித்து சாப்பிடுவார்கள். எளியமுறையில் செய்யலாம்.

தேவையான பொருட்கள்

சிக்கன் லெக் - ஒரு கிலோ

இஞ்சி பூண்டு விழுது - மூன்று டீ ஸ்பூன்

தயிர் - கால் கப்

மஞ்சள் பொடி - ஒரு டீ ஸ்பூன்

மிளகாய்பொடி - மூன்று டீ ஸ்பூன்

கரம்மசாலா - மூன்று டீ ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு.

ஆரஞ்ச் கலர் பொடி - சிறிதளவு

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு


லெக் ப்ரை செய்முறை

சிக்கன் கடைகளில் லெக் பீஸ் தனியாக கேட்டால் கிடைக்கும். அதை வாங்கி வந்து நன்றாக சுத்தம் செய்து மஞ்சள் தூள், மிளகாய்தூள், கரம் மசாலா, தயிர், கலர்பொடி, உப்பு போன்றவைகளைப் போட்டு நன்கு பிரட்டவும். கோழியுடன் எல்லாவற்றையும் நன்கு கலந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும். பின் கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பொரித்தெடுக்கவும். தயிர் சேர்ப்பதால் கோழி சட்டியில் ஒட்டும். அதனால் போட்ட சிறிது நேரத்தில் திருப்பி திருப்பி விடவும்.. நன்கு பொரித்தெடுக்கவும். சுவையான காரமான சிக்கன் லெக் ப்ரை ரெடி.
----------------------------------------

மிளகுத்தூள் மட்டன் தொக்கு

வளரும் குழந்தைகளுக்கு மட்டன் சமைத்து தருவது அவசியம். அதில் உள்ள உயர்தர புரதச் சத்து குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்றது. காரம் குறைந்த மிளகு அதிகம் சேர்க்கப்பட்ட மட்டன் தொக்கு குழந்தைகளுக்கு ஏற்றது. அனைத்து தரப்பினரும் விரும்பி சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்

மட்டன் - கால்கிலோ
சின்ன வெங்காயம் – 50 கிராம்
தக்காளி - 1
மிளகுத்தூள் - 2 டீ ஸ்பூன்
இஞ்சி, பூண்டு 2 டீ ஸ்பூன்
தனியா – 1 டீ ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 டீ ஸ்பூன்
வர மிளகாய் -2
பட்டை,லவங்கம் சிறிதளவு
கருவேப்பிலை தாளிக்க சிறிதளவு
எண்ணெய் 3 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

மட்டன் தொக்கு செய்முறை

வாணலியில் அரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வரமிளகாய், தனியா, வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி வைக்கவும். அவற்றை தனியாக மிக்சியில் அரைத்து எடுக்கவும்.

குக்கரில் இரண்டு 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கறிவேப்பிலை, பட்டை, லவங்கம் போட்டு தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய மட்டனை நன்கு கழுவி குக்கரில் போட்டு வதக்கவும், அப்போது இஞ்சி, பூண்டு விழுது போட்டு கிளறிவிடவும். பின்னர் உப்பு, மஞ்சள் தூள் போட்டு நன்கு கிளறவும்.

இதோடு அரைத்து வைத்த வெங்காய, தக்காளி விழுதை போட்டு வதக்க வேண்டும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். குக்கரில் மூடி போட்டு 4 விசில் வரை விடவும். விசில் இறங்கிய உடன் குக்கரை திறந்து அதில் மிளகு தூள் போட்டு கிளறவும்.

பின்னர் மிதமான தீயில் எண்ணெய் பிரியும் வரை வேக விடவும். சுவையான மட்டன் தொக்கு தயார். சூடான சாதத்திற்கோ, சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.
-------------------------------------------------------

முட்டை கிரேவி ரெஸிபி

முட்டையில் புரதச் சத்து உள்ளது. முட்டையை சாதாரணமாக வேகவைத்து சாப்பிடுவதை விட கிரேவி போல செய்து சாப்பிடுவது கூடுதல் சுவையை தரும்.

தேவையான பொருட்கள்

முட்டை - 5
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 3

இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டீ ஸ்பூன்
தனியாதூள் – 2 டீ ஸ்பூன்

மிளகு, சீரகத்தூள் – 1 டீ ஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீ ஸ்பூன்
கரம் மசால் தூள் – அரை டீ ஸ் பூன்

எண்ணெய் - 3 டீ ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

முட்டை கிரேவி செய்முறை

வெங்காயம், தக்காளியை நைசாக நறுக்கிவைத்துக் கொள்ளவும், ஸ்டவ்வை பற்றவைத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவைக்கவும். காய்ந்த உடன் கருவேப்பிலை, கடுகு உளுந்து தாளிக்கவும். பொரிந்த உடன் வெங்காயம் போட்டு வதக்கவும். இஞ்சி பூண்டு போட்டு பச்சை வாசனை போகும் வரை கிளறவும். அதோடு தக்காளியை சேர்த்து சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள் போட்டு மிதமான தீயில் வைக்கவும். தக்காளி குழைய வெந்த உடன் நன்கு கிளறவிடவும். இத்துடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசால் தூள், மிளகு, சீரகத்தூள் சேர்த்து வதக்கவும். இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். நன்கு கொதித்து வரும்போது முட்டைகளை மெதுவாக உடைத்து ஊற்றவும்.

மிதமான தீயில் வைத்து முட்டைகளை வேடவிடவும். லேசாக திருப்பி வேக விட்டு கொத்துமல்லி தூவி இறக்கவும். முட்டைகள் சிதைந்து போகாமல் திருப்பிவிடவேண்டும். சுவையான முட்டை கிரேவி தயார். எளிதாக செய்யலாம். சூடாக சாதத்திற்கு போட்டு சாப்பிடலாம், சப்பாத்திக்கு சைடு டிஸ் ஆக தொட்டுக்கொள்ளலாம்.
---------------------------------------------
சுவையான சிக்கன் சுக்கா ரெசிபி

கோழிக்கறியை பல விதங்களில் செய்யலாம். எப்படி செய்தாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். அதிலும் உலர்வாக சுக்கா போல செய்து கொடுத்தால் குழந்தைகள் ஆவலோடு சாப்பிடுவார்கள். மிதமான காரம் கொண்ட இந்த சிக்கன் சுக்கா அனைவருக்கும் ஏற்றது.


தேவையான பொருட்கள்

சிக்கன் -- அரை கிலோ (சிறிதாக நறுக்கியது)

பெரிய வெங்காயம் -- 2

இஞ்சி பூண்டு விழுது 3 டீ ஸ்பூன்

வரமிளகாய் – 7

மிளகு தூள் -- 1 டேபிள் ஸ்பூன்

சீரகத்தூள் -- 1 டீ ஸ்பூன்

மஞ்சள்தூள் – 1 டீ ஸ்பூன்

கொத்தமல்லி இலை – அரை கட்டு

எண்ணைய் – 5 டீ ஸ்பூன்

உப்பு – தேவைக் கேற்ப

சுக்கா செய்முறை

சிக்கனில் சிறிதளவு மஞ்சள் தூள் போட்டு நன்றாக கழுவவும் . பின்னர் உப்பு போட்டு நன்றாக கலந்து 1/2 மணிநேரம் ஊற வைக்கவேண்டும்.

வாணலியில் எண்ணைய் ஊற்றி நறுக்கி வைத்த பெரிய வெங்காயம் போட்டு வதக்கவும், வதங்கிய பின்னர் இஞ்சி பூண்டு போட்டு வாசனை போக வதக்கவும். அதோடு கோழிக்கறியை போட்டு நன்றாக வதக்கவும் அதன் மேல் மஞ்சள் தூள் போட்டு நான்றாக கிளறவும். வரமிளகாயை கிள்ளிப் போட்டு நன்றாக கிளறி லேசாக தண்ணீர் தெளிக்கவும். பின்னர் மூடிபோட்டு 15 நிமிடம் வேக விடவும். பொடியாக நறுக்கியதால் சிக்கன் நன்றாக சுருண்டு வெந்திருக்கும். அப்போது மிளகு, சீரக தூள் தூவி கிளறி மிதமான தீயில் வைக்கவும். சுவையான சுக்கா சிக்கன் ரெடி. இதன் மேல் மல்லித்தலை தூவி பரிமாறலாம்.

No comments:

Post a Comment