Posted Date : 13:18 (28/02/2014)Last updated : 15:38 (28/02/2014) - Vikatan.com
''இந்தியா போன்ற பெரிய நாடுகளில் உணவு தானியத்துக்கான தேவை அதிகம். ஆகையால், மரபணு மாற்றுப்பயிர் தொழில்நுட்பத்தை முற்றிலும் புறம்தள்ளக் கூடாது. அதில் உள்ள நன்மைகளைக் கணக்கில்கொள்ள வேண்டும்.
பன்னாட்டு நிறுவனங்கள் கண்டுபிடித்த மரபணு மாற்றுப் பயிர் தொழில்நுட்பம் வேண்டாம் என்றால்... இந்தியாவில் உள்ள ஆராய்ச்சி நிலையத்திலேயே, இந்திய விஞ்ஞானிகளைக் கொண்டு மரபணு மாற்றுப் பயிர் ஆய்வைச் செய்யலாமே! இப்போது நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உணவுப் பயிர்கள், ஒரு காலத்தில் காடுகளில் இயற்கையாக விளைந்து கிடந்தன.
அதில் நல்லவற்றை தனிப்பயிர்களாக சேகரித்து, பெரிய அளவில் உற்பத்தி செய்து கொண்டோம். அதேபோல, மரபணு மாற்று தொழில்நுட்பத்திலும் நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்வோம்...."
-இப்படி ‘விலையில்லா’ ஆலோசனைகளை அள்ளி வீசியிருக்கிறார், வெளிநாட்டில் குடியேறி, அங்குள்ள கம்பெனிகளின் பணத்தில் பலவிதமான ஆராய்ச்சிகளை செய்து, அதற்காக நோபல் பரிசையும் பெற்றிருக்கும்... இந்தியாவைச் (சிதம்பரம்) சேர்ந்தவரான விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்!
இது, சில மாதங்களுக்கு முன் இந்தியா வந்தபோது இவர் பேசிச் சென்றது.
''அறிவியல்பூர்வமற்ற விமர்சனங்களை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது. மரபணு மாற்று விதைகள் மூலமே தானிய உற்பத்தியைப் பெருக்க முடியும்... இந்தியாவின் பஞ்சத்தைப் போக்க முடியும்"
-கடந்த சில வாரங்களுக்கு முன் காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தேசிய அறிவியல் மாநாட்டில், நம்முடைய இந்தியாவின் மேன்மைமிகு பிரதமரும், அமெரிக்காவின் கெழுதகை நண்பருமான திருவாளர் மன்மோகன் சிங் ஆற்றிய வீர உரை இது.
இப்படிப்பட்ட அறிவுரைகள் எல்லாம், சமீபகாலமாக எதற்காக வேகமெடுக்கின்றன என்று யோசித்துக்கொண்டிருந்த நிலையில், இதோ 'பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது' என்பதுபோல, நேற்றைய தினம் (பிப்ரவரி 27) அரிசி உள்பட பலவகை தானியங்கள் மற்றும் காய்கறிகளில் மரபணு மாற்று பரிசோதனைக்கான கதவைத் திறந்துவிட்டிருக்கிறார் இந்தியாவின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி!
நம்முடைய வேளாண் விஞ்ஞானிகளும், அறிவியல் அறிஞர்களும் ஒப்புதலும் அறிவுரைகளும் கொடுத்துவிட்ட பிறகு, எதற்காக யோசிக் வேண்டும் என்று அதிரடியாக இப்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மொய்லி.
அறிவுரைகள் சொல்வது என்றால், யாருக்குமே கசப்பதில்லை. அதிலும், ‘அறிவியல் அறிஞர்’ என்கிற பட்டம் ஒட்டிக் கொண்டுவிட்டால் போதும், ‘நாம் எதைச் சொன்னாலும் ஆட்டுமந்தை மாதிரி அனைவரும் தலையசைத்துக் கேட்பார்கள்' என்றொரு நம்பிக்கை ‘அறிவாளி’களுக்கு வந்துவிடுகிறது. இஷ்டம்போல அள்ளிக் கொட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள்.
மக்களுக்கா... கம்பெனிகளுக்கா?
இவர்கள் எத்தனை அறிவாளிகளாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்... எத்தனை எத்தனை நோபல் பரிசுகளை வேண்டுமானாலும் அள்ளிக் குவித்துக் கொள்ளட்டும். ஆனால், இயற்கையிடம் இருந்து இவர்கள் எந்த அளவுக்குப் பாடம் படித்தார்கள் என்பதில்தான் இருக்கிறது... இவர்களின் கண்டுபிடிப்புகள், அறிவுரைகள் எல்லாம் மக்களுக்கு நன்மை செய்வதற்காகவா... அல்லது மக்களின் பெயரால் தங்களை வளர்த்துக் கொள்ளும் கம்பெனிகளை வாழவைப்பதற்காகவா என்பது!
விவசாயம் சார்ந்து எந்த கண்டுபிடிப்பு வந்தாலும், ‘இந்தியா போன்ற நாடுகளில், அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை பெருக்க வேண்டியிருக்கிறது. அதனால், விவசாயத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகள் அவசியம். குறிப்பாக மரபணு மாற்றுப்பயிர் ஒன்றுதான் நூற்றி இருபது கோடி மக்களுக்கும் சோறு போட முடியும்‘ என்றே இந்த ‘அறிவாளி’களும் சரி... பன்னாட்டு கம்பெனிகளுக்கு ஜால்ரா தட்டும் நம்மூர் அரசியல்வாதிகளும் சரி... பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.
தேவை, பரந்த மனது!
இந்தியா போன்ற நாட்டிலிருக்கும் மக்களுக்கு உணவளிக்க... எந்த அறிவியலும் தேவையில்லை. உண்மையான அறிவு மட்டுமே தேவை. அதாவது... பகுத்தறிவு மட்டுமே தேவை. ஆம், இங்கே தேவைக்கு மேலேயேதான் உற்பத்தியாகிறது. ஆனால், தேவையில்லாமல் வீணடிக்கப்படுவதுதான் அதிகமாக இருக்கிறது.
அரசாங்கத்தின் குடோன்களில் சேமிக்கப்படும் கோதுமை, அரிசி போன்ற உணவு தானியங்கள் ஆண்டுதோறும் பல ஆயிரம் டன்கள் பூச்சிப் பிடித்து வீணாகிக் கொண்டிருக்கின்றன. ‘இப்படி வீணடிப்பதற்கு பதிலாக, ஏழைகளுக்கு அதையெல்லாம் பகிர்ந்தளிக்கலாமே’ என்று கடந்த ஆண்டுகளில் மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சாட்டையை சுழற்றியது ஒன்றே போதும், இங்கே எந்த அளவுக்கு உணவுப் பொருட்கள் வீணடிக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த!
இதுமட்டுமா... ஆடம்பர திருமணங்கள், பலவிதமான ஆர்ப்பாட்டமான நிகழ்வுகள் என்றெல்லாம் தினம் தினம் டன் டன்னாக இங்கே வீணடிக்கப்படும் உணவுகளை அளவிட்டால்... அதையெல்லாம் எழுதி வைக்க பூமியின் சுற்றளவுக்கும் மேலாக காகிதம் தேவைப்படும். நட்சத்திர விடுதிகள், உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் என்று பல இடங்களிலும் சாப்பிடுபவர்களின் வாயில் இருப்பதைவிட, தட்டில் மிச்சமாக வைக்கப்படுவதுதான் அதிகமாக இருக்கிறது.
தட்டு நிறைய வைக்கப்படும் உணவிலிருந்து, ‘ஸ்டைல்’, ‘பந்தா’ என்று பலவிதங்களிலும் துளியூண்டு மட்டுமே கிள்ளி சாப்பிடுகிறார்கள். மீதி, வீணே குப்பைக்குத்தான் போய்ச் சேருகிறது. உணவுக்குக் கூட இங்கே திருவிழா எடுத்து, பசிக்காக சாப்பிடுவது என்பதை மறக்கடித்து... பந்தாவுக்காகவும்... கையில் பணமிருக்கிறது என்பதற்காகவும், தங்களுடைய பெருமையை பறைசாற்றிக் கொள்வதற்காகவும் உணவைப் பயன்படுத்துவது தொடர்ந்து ஊக்குவிக்கப்படுகிறது. இப்படி வீணடிக்கப்படும் உணவுப் பொருட்களை அளவெடுத்தால்... இன்னும் இரண்டு, மூன்று இந்தியாவுக்குகூட சோறு போட முடியும். அதற்கு தேவை... பரந்த மனதுதான்.
விஞ்ஞானிகளே, இதை ஏன் செய்ய மறுக்கிறீர்கள்?
‘இப்படி உணவை வீணாக்குகிறோமே...’ என்கிற எண்ணம், இந்த பகட்டு ஆசாமிகளின் மனதில் வரவேண்டும். அத்தகைய எண்ணங்களை உருவாக்கும் வேலைகளை இந்த விஞ்ஞான ‘அறிவாளி’களும், விதண்டாவாத அரசியல்வாதிகளும் செய்தால்... அது இந்த நாட்டுக்கு... ஏன், இந்த பூமிக்கே பயன்தருவதாக இருக்கும்.
அதைவிடுத்து, திரும்பத் திரும்ப அறிவியல் ஆராய்ச்சி என்கிற பெயரில், உண்ணும் உணவுக்காக பல்லாயிரம் ஆண்டுகளாக இயற்கையே நமக்காக உருவாக்கி வைத்திருக்கும் உணவுப் பொருட்களின் விதைகளில் விளையாடத் தேவையில்லை. புதிதாக விதைகளை உருவாக்குகிறேன் என்கிற பெயரில் ஆய்வுக்கூடங்களை அமைத்து, தேவையில்லாமல் இந்த வகையிலும் சுற்றுச்சூழலுக்கு கேடான வேலைகளைச் செய்யத் தேவையில்லை.
இவர்கள் சொல்லும், ‘மரபணு மாற்றுப்பயிர்’ பற்றி சிலர் கேள்விப்பட்டிருப்பீர்கள்.. பலர் கேள்விப் பட்டிருக்க மாட்டீர்கள். அது வேறொன்றும் இல்லை, இங்கே பயிர் செய்யப்படும் உணவு தானியங்களை பூச்சிகளும், பறவைகளும் கொஞ்சம் காலி செய்கின்றன. இதைத் தடுப்பதற்காக, காலகாலமாக வேப்பிலை போன்ற கசப்பான பொருட்களில் இருந்து திரவங்களைத் தயாரித்து தெளித்து, இயற்கையான முறையில் கட்டுப்படுத்தி வந்தார்கள் நம் முன்னோர்கள்.
பின்னர், பூச்சிக்கொல்லி என்கிற பெயரில் வீரிய விஷ மருந்துகளை உற்பத்தி செய்த வெள்ளைக்காரர்கள், அதை நம் தலையில் கட்டினார்கள். அதைத் தெளித்த மாத்திரத்தில் புழு, பூச்சிகள் எல்லாம் சுருண்டு விழுந்து சாக, பறவைகள் எல்லாம் தலைதெறிக்க ஓட... ‘ஆகா, வராது வந்த மாமணியே!’ என்று முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்... அந்த எமனுக்கு வரவேற்பு வளைவு கட்டி வரவேற்று, இங்கே நிரந்தரமாக குடியேற்றி விட்டோம்.
காலங்கள் உருண்டோட... பூச்சிகளை ஒரே நாளில் கொன்ற அந்த விஷம், நம்மை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டிருக்கிறது என்கிற உண்மையை உணர ஆரம்பித்தபோது... உலகமே அதிர்ந்து எழுந்தது. ஆம், இன்றைக்கு இங்கே புதிது புதிதாகப் பரவிக் கிடக்கும் பலவிதமான நோய்களுக்கு மூலகாரணியே... வேளாண்மையில் தாறுமாறாகப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளின் எச்சங்களால் வந்தவையே!
விளைவு... பல நாடுகளில் பூச்சிக்கொல்லி விஷங்களுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது. இந்தியாவில்கூட எண்டோசல்பான் எனும் விஷத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்ப, உச்ச நீதிமன்றமே அதற்கு தடை விதித்துள்ளது.
மில்லியன் டாலர் பிஸினஸ்!
இத்தகைய வரலாற்றுப் பின்னணியில் பிறந்திருப்பதுதான் இந்த மரபணு மாற்றுப்பயிர்கள். பூச்சிக்கொல்லி விஷங்களைத் தயாரித்து, பல மில்லயன் டாலர்கள் என்று பணம் பார்த்துக் கொண்டிருந்த பன்னாட்டு நிறுவனங்கள், அந்த வருமானத்தை இழக்க விரும்பவில்லை. அதற்காக கண்டுபிடித்ததுதான்... மரபணு மாற்றுப்பயிர். அதாவது, மண்ணில் இருக்கும் நுண்ணுயிரி ஒன்றின் மரபணுவை எடுத்து, பயிரின் விதைக்குள் செலுத்தி, அந்தப் பயிரிலேயே பூச்சிகளுக்கு எதிரான விஷத் தன்மையை உருவாக்கும் தொழில்நுட்பம்தான் இந்த மரபணு மாற்றுத் தொழில்நுட்பம். ஏற்கெனவே பயிரின் மீதுதான் விஷத்தைத் தெளித்தார்கள். தற்போது, பயிருக்குள்ளேயே ‘டெக்னாலஜி’ கொண்டு விஷத்தைத் திணித்துள்ளனர்.
மரபணு மாற்றப்பட்ட பயிரை, புழு மற்றும் பூச்சிகள் சாப்பிடாது என்பதுதான் நம் முன்பாக வைக்கப்படும்மிகமுக்கியமான பிரசாரம்! இதனால் பூசிகொல்லி தெளிக்கும் செலவு குறையும் என்றும் வலை வீசுகிறார்கள். புழு, பூச்சிகளே சாப்பிடாது என்றால், அந்தப் பயிரில் நிச்சயமாக அவற்றுக்கு எதிரான விஷம் இருக்கும்தானே! மனிதர்கள் மட்டும் எப்படி சாப்பிட முடியும்? இதைக் கேட்டால், ஆளாளுக்கு ‘விஞ்ஞானி’ என்கிற பெயரில், மற்றவர்களையெல்லாம் ‘முட்டாள்’ ஆக்குவதற்காக பாய்ந்தோடி வருகிறார்கள்.
ஐயா... அனைத்தும் அறிந்த புத்திசாலிகளே..! நாங்கள் முட்டாள்கள்தான். இந்த பூமியில் தாவரங்களைப் படைத்த இயற்கை, இது... புழு மற்றும் பூச்சிகளுக்கு, இது பறவைகளுக்கு, இது மனிதர்களுக்கு என்று பிரித்துப் பிரித்துப் படைக்கவில்லை. நாம் சாப்பிடும் அனைத்தையுமே புழு, பூச்சிகளும் பறவைகளும் சாப்பிடவே செய்கின்றன. அப்படியென்றால், அந்த உயிரினங்களே சாப்பிடாத உணவுப் பயிர்களை, நாம் எப்படி சாப்பிட முடியும்? என்றுதான் கேட்கிறோம். முட்டாள் தனமான எங்கள் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.
ஐரோப்பாவில் கடை திறக்க வேண்டியதுதானே?
‘மரபணு மாற்றப்பட்ட பயிரை ஏற்றுக்கொள்ளவே முடியாது’ என்று கறாராகச் சொல்லிக் கொண்டிருக்கின்றனவே ஐரோப்பிய யூனியன் நாடுகள். அங்கே போய் கடை திறக்க வேண்டியதுதானே... இந்த விஞ்ஞானிகள்...? அங்கு இவர்களின் பிரசாரத்தைச் செய்ய வேண்டியதுதானே...? முடியாது; அங்கெல்லாம் போனால், முட்டியைப் பெயர்த்துவிடுவார்கள். காரணம், அவர்களெல்லாம் உங்களுக்கு மேல் அறிவாளிகளாயிற்றே! அதனால்தான் இளிச்சவாய இந்தியாவுக்குள் எப்படியாவது திணிக்கப்பார்க்கிறீர்கள். எங்கள் ‘கைகளை’ பயன்படுத்தி, எங்கள் கண்களை குருடாக்கப் பார்க்கிறீர்கள்
இது ஒரு பக்கம் இருக்கட்டும்... மரபணு மாற்றுப் பயிர்களில் உட்காரும், தேனீ, வண்ணத்துப்பூச்சிகள்... அவற்றிலிருக்கும் மகரந்தங்களுடன் அக்கம், பக்கத்து வயல்களுக்கும் சென்று.. அனைத்து வயல்களுக்கும் பரவிவிடும் என்று இதை உருவாக்கி உலவவிட்டிருக்கும் மான்சான்டோ நிறுவனமே கூறிக் கொண்டிருக்கிறது. இப்படி பரவியதால், அக்கம் பக்கத்து வயல் விவசாயிகளிடம், ‘என் தொழில்நுட்பத்தை திருடிவிட்டாய்’ என்று சொல்லி இந்த நிறுவனம் நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வம்பிழுப்பது கூட நடந்திருக்கிறது. அப்படியென்றால், நாளைக்கு மரபணு மாற்றுப்பயிர் விளையும் காட்டுக்கு பக்கத்து காட்டு ராமசாமி, கோவிந்தசாமிகளின் நிலை என்னாவது.
ஒரு கட்டத்தில் இங்கே இருக்கும் அத்தனை விதைகளும் இந்த மரபணு மாற்று மலட்டு விதைகளாக மாற்றப்பட்டுவிட்டால், இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் புழு, பூச்சி, பறவைகள் எல்லாம்... உணவுக்காக எங்கே போவது. இதற்கெல்லாம் பதில் சொல்லுங்கள் நோபல் பரிசு எனும் உலகமகா பரிசைப் பெற்றிருக்கும் விஞ்ஞானி திருவாளர் ராமகிருஷ்ணன் அவர்களே!
‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’ என்று இந்த பூமி, இங்கே வாழும் அனைத்துயிர்களுக்கும் சொந்தம். பகுத்துண்டு வாழும்போதுதான், இயற்கை சமநிலை தொடரும் என்பதை இவ்வளவு அழகாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சொல்லிச் சென்றிருக்கிறானே எங்களின் பாட்டன் வள்ளுவன், அவன் எந்த நோபல் பரிசையும் வாங்கவில்லை. ஒருவேளை, அதனால்தான் இப்படி சொல்ல முடிந்ததோ... என்னவோ?!
விஞ்ஞானிகள் அல்ல... விவசாயிகள்!
‘காடுகளில் விளைந்து கிடைந்த தானிய வகைகளை தரம் பிரித்தது பயிரிட்டுதான் இந்த அளவுக்கு வளர்த்தெடுத்துள்ளோம்‘ என்றும் கூறியிருக்கிறார் இந்த விஞ்ஞானி ராமகிருஷ்ணன். அதையெல்லாம் செய்தது... மெத்தப்படித்த விஞ்ஞானிகள் கூட்டம் அல்ல. உங்கள் தாத்தன்... எங்கள் தாத்தன் என்று காலகாலமாக இங்கே வாழ்ந்த விவசாயிகள்தான். அவர்கள் ஒருபோதும் இயற்கைக்கு மாறாக எதையும் செய்யவில்லை. காடுகளில் கிடந்த பயிர்களைக் கண்டெடுத்து, நிலத்தை சீரமைத்து, அந்த இயற்கைக்கு எந்த இடைஞ்சலும் வராமல், பயிரிட்டு வளர்த்தெடுத்தார்கள். இதற்காக அரசாங்க சம்பளம், கம்பெனிகள் தரும்பணத்தில் வெளிநாட்டு உல்லாச சுற்றுலா... எதையும் அனுபவிக்கவில்லை. நாளைய தலைமுறை நஞ்சில்லா உணவை உண்ண வேண்டும்... பற்றாக்குறை இல்லாமல் விதைத்து, காலகாலத்துக்கும் உணவிட வேண்டும் என்கிற ஒற்றை நோக்கமே அவர்களிடம் இருந்தது. அப்படி அந்த விவசாயிகள் சேகரித்து வைத்த விதைகளுக்கு பெயரையும், நம்பரையும் கொடுக்கும் வேலையைத்தான் உங்களைப் போன்ற விஞ்ஞானிகள் செய்திருக்கிறீர்கள்.
இயற்கையை கெடுக்காமல்... இயற்கை வேளாண்மை மூலமே... இன்னும் மூன்று உலகத்துக்கு வயிறு நிறைய சோறு போடமுடியும். ஆனால், இத்தகைய இயற்கை வேளாண்மை மூலமாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு பணம் கிடைக்காது... விஞ்ஞானிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் கமிஷன் கிடைக்காது. அதனால்தான்... இயற்கைக்கு வேட்டு வைக்கும் விஷயங்களை மட்டுமே பரிந்துரை செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அதையேதான் இப்போதும் செய்திருக்கிறார்... வீரப்ப மொய்லி.
இது நாற்பது, ஐம்பது ஆண்டுகளாகவே இங்கே தொடரத்தான் செய்கிறது. ‘வேடிக்கை பார்ப்பதைத் தவிர நாமென்ன செய்வது? என்றேதான் இருக்கப் போகிறோமோ?!