மண மணக்கும் செட்டிநாடு மட்டன் குழம்பு
மட்டன் குழம்பு என்றாலே அது செட்டிநாட்டு மட்டன் குழம்பு தான், அந்த அளவிற்கு சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும். இதற்கு காரணம் இதில் சேர்க்கப்படும் மசாலாக்கள். காரமான குழம்பை சாப்பிட நினைப்பவர்கள் இதை முயற்சி செய்யலாம். சரி தேவையான பொருட்களுக்கு போவோம்.
தேவையான பொருட்கள்
மட்டன் - அரை கிலோ
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
தனியா தூள் - 3 ஸ்பூன்
சோம்பு - 1/2 டீ ஸ்பூன்
பட்டை, கிராம்பு கருவேப்பில்லை
தாளிக்க சிறிதளவு எண்ணெய் - 4 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
அரைக்க தேவையானவை :
மிளகு - 1 டீ ஸ்பூன்
சீரகம் - 1 டீ ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
பூண்டு - 6 பல்
இஞ்சி - ஒரு துண்டு
செய்முறை:
கறியை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சுத்தம் செய்த கறியை சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். 5 விசில் வரை விட்டால் கறி நன்றாக வெந்து விடும்.
ஒரு கடாயில் மிளகு, சீரகம், சோம்பு மூன்றையும் வறுத்து பூண்டு, இஞ்சி சேர்த்து அரைக்கவும்.
அகலமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, கருவேப்பில்லை சேர்த்து தாளிக்கவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். இத்துடன் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். நன்றாக வதங்கிய உடன் அரைத்து வைத்த மசாலாவை போட்டு வதக்கவும். சிறிது வதங்கிய பின் அதில் மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி, அதில் வேகவைத்த கறியைப் போட்டு நன்கு கொதிக்க விடவும். குழம்பு நன்றாக கொதித்து வற்றி எண்ணெய் மிதந்து வரும். இப்பொழுது ஸ்டவ்வை நிறுத்திவிடலாம். சுவையான செட்டிநாட்டு மட்டன் குழம்பு தயார்.
காரசாரமான...அசாரி கோஸ்ட் (மட்டன்)
மழைக்காலம், குளிர்காலம் என்றால் காரசாரமான ரெசிபி எதாவது சாப்பிடணும் போல இருக்கும். அப்ப இந்த அசாரி கோஸ்ட் (மட்டன்) ரெசிபி ரொம்ப நல்லா இருக்கும். அது எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள் :
மட்டன் (1/2 இஞ்ச் எலும்புடன் கூடிய கறி) - 800 கிராம்
வெங்காயம் - 4
தக்காளி - 4
வரமிளகாய் - 8
கிராம்பு - 5
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 2 டீஸ்பூன்
எலுமிச்சைப்பழச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு எண்ணெய் - 7 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
செய்முறை :
1. முதலில் மட்டனை நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும். பின் வெங்காயம், தக்காளியை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2. பிறகு வரமிளகாய், கடுகு, வெந்தயம், சீரகம், பெருஞ்சீரகம், கிராம்பு ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து, பின் அவற்றை குளிர வைத்து ஒன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.
3. பின் ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடுகு எண்ணெயை ஊற்றி, வெங்காயத்தை அதில் போட்டு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும். பின் தக்காளி, இஞ்சிபூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
4. பிறகு அதில் அரைத்து வைத்துள்ள அந்த பொடியை போட்டு சிறிது நேரம் நன்கு கிளரவும்.
5. அடுத்து அதில் கழுவிய மட்டனை சேர்த்து நன்கு பிரட்டவும். பின் அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளரவும். அதில் ஊற்றிய எண்ணெயும், மசாலாவும் தனியாக பிரியும் வரை பிரட்ட வேண்டும்.
6. பின் அதில் இரண்டு கப் தண்ணீரை ஊற்றி, மூடி போட்டு மூடிவிட்டு அரைத் தீயில் வைத்து மட்டன் வேகும் வரை வேக விடவும்.
7. மட்டன் வெந்ததும், அதில் எலுமிச்சைப்பழச்சாற்றை விட்டு கிளரி இறக்கி விடவும்.
8. இறுதியாக நறுக்கிய கொத்தமல்லியை அதன் மேல் தூவி பரிமாறலாம்.
இதோ சுவையான, காரசாரமான அசாரி கோஸ்ட் ரெடி!!!
காரமான...மட்டன் சில்லி!
பிரியாணிகளுக்கு சில சைடு டிஷ்களை செய்வீர்கள். அந்த சைடு டிஷ்ஷில் மட்டன் சில்லி செய்து கொடுத்தால் நன்கு காரமாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். இப்போது இந்த மட்டன் சில்லியை செய்வது எப்படியென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள் :
மட்டன் - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 12
தக்காளி - 1
சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
பட்டை - 2
கிராம்பு - 2
மஞ்சள் தூள் - 1/2 சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் மட்டனை நன்கு கழுவி வைத்துக் கொள்ளவும். பின் வெங்காயத்தை நறுக்காமல், உரித்து வைத்துக் கொள்ளவும். தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும்.
பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பின் அதில் உரித்து வைத்துள்ள வெங்காயத்தையும், கீறி வைத்திருக்கும் பச்சை மிளகாயையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
சிறிது நேரம் கழித்து நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து வதக்கவும். பின்னர் கழுவி வைத்துள்ள மட்டனை அதில் போட்டு, சிறிது உப்பை சேர்த்து ஒரு முறை பிரட்டி, மஞ்சள் தூள் மற்றும் 1/2 கப் தண்ணீரை விட்டு மூடி 3-4 விசில் விட்டு இறக்கவும்.
இப்போது குக்கரில் இருக்கும் மட்டனில் சிறிது தண்ணீர் இருக்கும். ஆகவே அந்த குக்கரை மறுபடியும் அடுப்பில் வைத்து, தண்ணீர் சுண்டும் வரை நன்கு சுருளக் கிளறவும்.
இப்போது சுவையான காரமான மட்டன் சில்லி ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி பரிமாறலாம்.
நல்லி எலும்பு கறி கிரேவி!
ஆட்டு எலும்பு கறி சத்து நிறைந்தது. இதனை வேகவைத்து சூப் ஆக குடிக்கலாம். கிரேவி செய்தும் சாப்பிடலாம். கிராமங்களில் இன்றைக்கும் நல்லி எலும்பு கறிக்கு அதிக வரவேற்பு உண்டு. பக்குவம் மாறாமல் செய்தால் சுவை சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்
ஆட்டு நல்லி எலும்பு - 15
பெரிய வெங்காயம் - 1/2 கிலோ
தக்காளி - 5
தயிர் - 1/2 கப்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - 1 கைப்பிடி
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
பட்டை - சிறிது
கிராம்பு - 5
ஏலக்காய் - 4
பிரிஞ்சி இலை - 2,
நல்லி எலும்பு கறி செய்முறை
தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். ஆட்டு எலும்பை கழுவி சுத்தம் செய்து வைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும். இதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கி, கறியை சேர்த்து பிரட்டவும்.
கறி நன்கு வதங்கியதும் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடவும். 10,12 விசில் வந்த உடன் ஸ்டவ்வை நிறுத்தி விடவும். விசில் இறங்கிய உடன் தக்காளி, நன்கு அடித்த தயிர் சேர்த்து கொதிக்க விடவும். அடுப்பை மிதமாக எரியவிட்டு எண்ணெய் பிரியும் வரை வைத்து இறக்கவும். இதனுடன் நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும். நல்லி எலும்பு கிரேவி சாதம், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.
மிளகுத்தூள் மட்டன் தொக்கு!
வளரும் குழந்தைகளுக்கு மட்டன் சமைத்து தருவது அவசியம். அதில் உள்ள உயர்தர புரதச் சத்து குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்றது. காரம் குறைந்த மிளகு அதிகம் சேர்க்கப்பட்ட மட்டன் தொக்கு குழந்தைகளுக்கு ஏற்றது. அனைத்து தரப்பினரும் விரும்பி சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
மட்டன் - கால்கிலோ
சின்ன வெங்காயம் – 50 கிராம்
தக்காளி - 1
மிளகுத்தூள் - 2 டீ ஸ்பூன்
இஞ்சி, பூண்டு 2 டீ ஸ்பூன்
தனியா – 1 டீ ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 டீ ஸ்பூன்
வர மிளகாய் -2
பட்டை,லவங்கம் சிறிதளவு
கருவேப்பிலை தாளிக்க சிறிதளவு
எண்ணெய் 3 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மட்டன் தொக்கு செய்முறை
வாணலியில் அரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வரமிளகாய், தனியா, வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி வைக்கவும். அவற்றை தனியாக மிக்சியில் அரைத்து எடுக்கவும்.
குக்கரில் இரண்டு 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கறிவேப்பிலை, பட்டை, லவங்கம் போட்டு தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய மட்டனை நன்கு கழுவி குக்கரில் போட்டு வதக்கவும், அப்போது இஞ்சி, பூண்டு விழுது போட்டு கிளறிவிடவும். பின்னர் உப்பு, மஞ்சள் தூள் போட்டு நன்கு கிளறவும்.
இதோடு அரைத்து வைத்த வெங்காய, தக்காளி விழுதை போட்டு வதக்க வேண்டும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். குக்கரில் மூடி போட்டு 4 விசில் வரை விடவும். விசில் இறங்கிய உடன் குக்கரை திறந்து அதில் மிளகு தூள் போட்டு கிளறவும்.
பின்னர் மிதமான தீயில் எண்ணெய் பிரியும் வரை வேக விடவும். சுவையான மட்டன் தொக்கு தயார். சூடான சாதத்திற்கோ, சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.
சாஹி மட்டன் குருமா!!!
மட்டன் பிடிக்காதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். அந்த மட்டனை இதுவரை குழம்பு, வறுவல் என்று செய்து வீட்டில் உள்ளோருக்கு கொடுத்திருப்போம். ஆனால் இப்போது அந்த மட்டனை வைத்து கொஞ்சம் வித்தியாசமாக செய்து கொடுத்து நல்ல பாராட்டைப் பெற, சாஹி மட்டன் குருமா சிறந்தது. அது எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள் :
எலும்பில்லாத மட்டன் - 600 கிராம்
வெங்காயம் - 3
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் - 3
கிராம்பு - 4
இலவங்க பட்டை - 1
மிளகு - 7
இஞ்சிபூண்டு விழுது - 3 டீஸ்பூன்
மல்லிப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
முந்திரி பேஸ்ட் - 1/4 கப்
கரம் மசாலா பொடி - 1 டீஸ்பூன்
கிரீம் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
மட்டனை ஒரு இன்ச் சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும். பின் அதனை நன்கு சுத்தமாக கழுவி வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும்.
பின் அதில் இலவங்க பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு சேர்த்து நன்கு மணம் வரும் வரை வதக்கவும்.
பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அதோடு இஞ்சிபூண்டு விழுது சேர்த்து நன்கு 1 நிமிடம் தொடர்ந்து வதக்கவும். முக்கியமாக அடி பிடிக்காமல் பார்த்துக் கொள்ளவும். பின் அதில் கழுவிய மட்டனை சேர்த்து, தீயை அதிகப்படுத்தி 3-4 நிமிடம் கிளறி வேகவிடவும்.
பின் மல்லிப் பொடி, மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, மறுபடியும் 2-3 நிமிடம் வேக விடவும்,
அடுத்து தயிர் மற்றும் ஒரு கப் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். பின் தீயின் அளவை குறைத்து, மட்டனை தட்டை வைத்து மூடி, மட்டன் வேகும் வரை வேக விடவும்.
பிறகு அதில் முந்திரி பேஸ்ட் மற்றும் கரம் மசாலா பொடியை போட்டு, பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விடவும். பின் அதில் கிரீமை சேர்த்து கிளறி 10 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.
இப்போது சுவையான சாஹி மட்டன் குருமா ரெடி!!!
மங்லோரியன் சிக்கன் ரெசிபி: கோரி ரொட்டி கிரேவி!!!
தென்னிந்திய உணவுகளில் மங்லோரியன் ரெசிபி மிகவும் பிரபலமானது. அதிலும் அசைவ உணவுகள் தான் மிகவும் சுவையாக இருக்கும். இப்போது அத்தகைய மங்லோரியன் ரெசிபிகளில், சிக்கனில் சூப்பராக இருப்பது என்னவென்றால், அது கோரி ரொட்டி தான். என்ன பெயர் வித்தியாசமாக இருக்கிறதென்ற பார்க்கிறீர்களா? சாதாரணமான பெயர் தான். அதாவது கோரி என்றால் சிக்கன், ரொட்டி என்றால் சப்பாத்தி என்று அர்த்தம். ரொட்டி எப்போதும் சற்று கடினமாக இருக்கும். அதனை சிக்கன் கிரேவியுடன் தொட்டு சாப்பிட்டால், சற்று மென்மையாகிவிடும். எனவே தான் இதற்கு இந்த பெயர் வந்தது. இப்போது அந்த கோரி ரொட்டியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோ (சுத்தமாக கழுவியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தேங்காய் பால் - 1/2 கப் (கெட்டியானது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 3
ஏலக்காய் - 3
வரமிளகாய் - 4
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
புளி தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்க வேண்டும்.
பின்னர் வதக்கி இறக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி வரமிளகாய், சீரகம், இஞ்சி பூண்டு விழுது, கிராம்பு, பட்டை மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்கு 1 நிமிடம் வதக்க வேண்டும்.
பிறகு அரைத்து வைத்துள்ள வெங்காயப் பேஸ்ட், மஞ்சள் தூள், மல்லி தூள், புளி தண்ணீர், தேங்காய் பால் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் கலந்து, கொதிக்க விட வேண்டும்.
மசாலா கொதித்ததும், அதில் சிக்கன் துண்டுகளை போட்டு, சிறிது உப்பு சேர்த்து, நன்கு கிளறி, மூடி போட்டு சிக்கன் வேகும் வரை கொதிக்க விட்டு, மசாலா ஓரளவு கெட்டியான பின் இறக்க வேண்டும்.
இப்போது சுவையான கோரி ரோட்டி ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியை தூவி, ரொட்டி என்னும் சப்பாத்தியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.
அருமையான... ஸ்பைசி மீன் மசாலா!!
பொதுவாக மீனை குழம்பு, மசாலா, வறுவல் என்று செய்வார்கள். ஆனால் மசாலாவில் இப்போது செய்விருக்கும் மசாலா சற்று வித்தியாசமானது. அதாவது, இதில் மீனை வறுத்து, பின் மசாலா செய்வோம். சரி, அந்த மீன் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
பொரிப்பதற்கு...
சாலமன் மீன் - 2
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
மசாலாவிற்கு...
வெங்காயம் - 3 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
தக்காளி - 2 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
சோம்பு தூள் - 1 டீஸ்பூன்
கிராம்புத் தூள் - /14 டீஸ்பூன்
வெந்தயப் பொடி - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் மீனை நன்கு கழுவி சிறு நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். பின் அதனை கழுவி வைத்துள்ள மீனில் தடவி, 10 நிமிடம் ஊற வைக்கவும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் ஊற வைத்துள்ள மீனை போட்டு பொரித்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின் மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சோம்பு தூள், வெந்தய பொடி, கிராம்பு தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
நன்கு வதங்கியதும், அதில் மசாலாவிற்கு ஏற்ற அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்கவிடவும்.
பிறகு பொரித்து வைத்துள்ள மீனை இந்த மசாலாவில் சேர்த்து, ஒரு முறை பிரட்டி, தீயை குறைவில் வைத்து, 3 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.
இப்போது அருமையான மீன் மசாலா ரெடி!!! இதன் மேல் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு, சாதத்துடன் சாப்பிட்டால், மிகவும் சுவையாக இருக்கும்.